வைஃபை ஆன் செய்ததும் தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
”திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 4 ஆம் தேதி தூத்துக்குடிக்கு சென்றார். மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் சென்றவர், அங்கிருந்து தூத்துக்குடி நகரை நோக்கி செல்லும் வழியில், புதுக்கோட்டை நல்லமலை பகுதியில் இருக்கும் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயலின் வீட்டுக்குச் சென்றார். அங்கே ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் கூடிவிட்டனர்.
ஜோயல் வீட்டுக்கு சென்று காபி சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினரிடம் சில நிமிடங்கள் உரையாடிய உதயநிதி ஸ்டாலின், அவர் வீட்டு வாசலில் நிறுவப்பட்ட 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்தார். அப்போது உதயநிதிக்கு உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி செங்கோலை இளைஞரணி சார்பாக அளித்தார் ஜோயல்.
அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் உதயநிதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். பிறகு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர் தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்டங்கள் இணைந்து நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்துக்கு சென்றார்.
செயல் வீரர்கள் கூட்டத்தை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இரு மாவட்டச் செயலாளர்கள், இரு அமைச்சர்கள் ஒன்றாக ஏற்பாடு செய்த அளவுக்கு கூட்டம் இல்லை. உதயநிதி வருவதற்கு சற்று முன்பாக காலியாக இருந்த நாற்காலிகளை அடுக்கிக் அடுக்கி ஓரமாக வைத்துக் கொண்டிருந்தனர்.
இந்திய அளவில் பரபரப்பாக உதயநிதி பேசப்பட்டு வரும் நிலையில்… பிரம்மாண்டக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்து வந்த உதயநிதி இதனால் டென்ஷனாகிவிட்டார். அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகிய அமைச்சர்கள் பங்கேற்றபோதும் அவர்கள் யாரும் பேசாமல், தான் மட்டுமே பேசிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் உதயநிதி.
உதயநிதியின் தூத்துக்குடி விசிட்டில் இன்னொரு முக்கியமான விஷயம், உதயநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பியும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்துகொள்ளாததுதான். இது தொடர்பாக தூத்துக்குடி வட்டாரத்தில் விசாரித்தபோது, ’நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாள்தான் துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி எம்பிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். தனக்கு முறைப்படி அழைப்பு இல்லை என்பதாலும், மறுநாள் சென்னையில் சில நிகழ்ச்சிகள் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாலும் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை தூத்துக்குடியில் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த கனிமொழி அன்று இரவு புறப்பட்டு சென்னை சென்றுவிட்டார்.
இளைஞரணிப் பிரமுகர்களிடம் விசாரித்தபோது, ‘கனிமொழிக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கும் சமீபகாலங்களாக இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. கீதாஜீவனின் தம்பியான தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமிதான் எம்பி. கனிமொழியோடு இணக்கமாக இருக்கிறார். இந்த நிலையில் கனிமொழிக்கும் உதயநிதிக்கும் இடையில் பாலமாக செயல்பட்டு தேதிகளை சரிபார்த்து இருவரையும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க வேண்டியது மாவட்டச் செயலாளரான கீதாஜீவனின் பொறுப்பு. ஆனால் அவர் கனிமொழிக்கும் உதயநிதிக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ…’ என்கிறார்கள்.
ஏற்கனவே திமுகவில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், கனிமொழிக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. இந்நிலையில் உதயநிதியின் தூத்துக்குடி விசிட்டில் கனிமொழி கலந்துகொள்ளாதது தென் மாவட்டம் முதல் சென்னை வரை பேசுபொருளாகியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் முதல் படம்!
பாரதம்னு பேர் வச்சா இந்தியா முன்னேறும்: அப்டேட் குமாரு