மகளிர் மசோதா: கனிமொழி எழுப்பும் கேள்விகள்!

அரசியல்

மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் அதிகாரமளிக்கும் இடஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் இன்று (செப்டம்பர் 19) தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி மசோதா குறித்து கூறும்போது, “பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல மகளிர் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா அவையில் நிறைவேற்றப்படும் என்ற பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்தோம்.

இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்த பிறகு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சொல்லும் போது எப்பொழுது செயல்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி எழுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில்லை. தேர்தல் அரசியலுக்காக கொண்டு வரப்பட்ட மசோதாவாக பார்க்க முடிகிறது. நாட்டில் உள்ள பெண்கள் எதிர்பார்ப்பை நொறுக்கக்கூடிய வகையில் மசோதா உள்ளது.

மசோதா தாக்கல் செய்யப்படும் போது அதனை மற்றவர்களுக்கு சர்குலேட் செய்யவில்லை. அனைவரும் எழுந்து கேள்விகேட்ட பிறகு தான் மசோதாவை அப்லோட் செய்கிறார்கள். பெரும்பான்மையினர் வரவேற்கக்கூடிய மசோதாவை ஏன் மூடு மந்திரம் போன்று கொண்டு வர வேண்டும் என்பது புரியவில்லை. பாஜக முதல் முறை ஆட்சிக்கு வந்தபோதே மகளிர் இடஒதுக்கீடு மசோதா வாக்குறுதி கொடுத்தார்கள். இத்தனை கால தாமதம் ஏன் என்று தெரியவில்லை.

இவ்வளவு விதிமுறைகளை தாண்டி தான் இந்த மசோதா செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லும் போது நம்பிக்கையின்மையைத் தான் காட்டுகிறது. இந்த மசோதா செயல்பாட்டுக்கு வர 20 ஆண்டுகள் ஆகலாம் என்ற எண்ணம் தான் உருவாகிறது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

நீட் தேர்வு எப்போது? -வெளியான அறிவிப்பு!

உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!

 

+1
0
+1
0
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *