ஆளுநருக்கு திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை: கனிமொழி காட்டம்!

காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து ஆளுநர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று (ஜனவரி 16 ) திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், ஆளுநருக்கு திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம், காவி உடை தரித்த திருவள்ளுவர் படத்தை ஆளுநர் ரவி பகிர்ந்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “திருவள்ளுவர் மற்றும் திருக்குறளைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவர் ஒரு துறவி என யாருமே சொன்னது கிடையாது. அவருக்கு திருமணமாகி, மனைவி இருந்ததாக ஒரு கருத்து இருக்கிறது.

இல்லறம் குறித்து கவித்துவமாக திருவள்ளுவரைப் போன்று யாரும் எழுதியது கிடையாது. திருவள்ளுவரைப் படித்து புரிந்துகொண்டவர்கள் அவரை துறவியாக பார்த்தது கிடையாது.

திருக்குறளில் எந்த மதத்தின் அடையாளங்களும் கிடையாது. அதனால் சனாதனத்தையோ, இந்துத்துவத்தையோ திருவள்ளுவர் மீது நாம் திணிக்க முடியாது. அடிப்படையில் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மதங்களை கடந்து, மனிதநேயத்தை பேசுவது தான் திருக்குறள்.

இதனை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும். மனிதநேயத்திற்கு ஒரு நிறம் இருக்குமானால் அதுதான் திருவள்ளுவரின் நிறம். எனக்கு தெரிந்து திருவள்ளுவருக்குப் பிறகு மனிதநேயத்தின் அடையாளம் பெரியார். அதனால் திருவள்ளுவருக்குக் கருப்பு உடை வேண்டுமானால் அணிவிக்கலாம். வேறு உடை அணிவிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வசூலில் அசத்தும் அயலான்… எவ்ளோ வசூல் தெரியுமா?

’இந்த வீரரால் இந்திய தேர்வுக்குழுவுக்கு பெரும் தலைவலி’: கவாஸ்கர்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts