மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையிலும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க மறுத்து வருகிறார் என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து 2 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
மனிதாபிமான மற்ற இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த கொடூர சம்பவத்தையும், மணிப்பூரில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசையும் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தமிழகத்திலும் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஜூலை 23) தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி பேசுகையில், ”பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாட்டையே வன்முறையின் பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் வன்முறையை தடுக்க பாஜக அரசு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாட்டில் எங்கு எந்த பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் நாங்கள் குரல் எழுப்புவோம். பாஜக ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவத்தைதான் தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் வன்முறை நடந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூரில் ஒரே நாளில் கலவரம் வெடிக்கவில்லை. அங்கு ஆண்டாண்டுகளாக பிரச்சனை நடக்கிறது.
இதற்கிடையே குக்கி பழங்குடியின மக்களை போதை பொருட்களை உற்பத்தி செய்கிறவர்கள், அமைதிக்கு குந்தகம் விளைப்பவர்கள் என்று கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் புண்படுத்திக் கொண்டே இருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து பழங்குடியின, ஒடுக்கப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் மணிப்பூர் முதல்வர் பேசி இருக்கிறார்.
மேலும் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரத்திற்கு மெய்தி இன மக்களுக்கு உதவும் வகையில் ஆயுதங்களை ஆளும் அரசே கொடுத்து வருகிறார்கள். அங்கு கோவில்கள், சர்ச்சுகள் கொளுத்தப்படுகிறது. மனிதர்கள் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கிடையில் காண்போரை உள்ளத்தை அசைத்து போடும் வகையில் நிர்வாணமாக இரண்டு பழங்குடியின பெண்கள் இழுத்து செல்லப்படும் வீடியோ வெளியானது.
இத்தனை கலவரத்திற்கு மத்தியிலும் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மணிப்பூர் கலவரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜக இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் கலவரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான வீடியோ குறித்து அதிர்ச்சிக்குள்ளான நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுட்ட நிலையிலும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இதுவரை பதில் அளிக்கவில்லை. மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும்.
எங்களை மேடையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்று கூறவில்லை. பெண்களை சுதந்திரமாக, பாதுகாப்பாக அவளை சமமாக மதிக்க தெரிந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா