2022-23 ஆண்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளார்கள். இதில் திமுக எம்.பி.-க்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவாவிற்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பெரும்பான்மை மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிலைக்குழு பதவிகள் வழங்கப்படும்.
அதன்படி, திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழிக்கு வேதியியல் மற்றும் உரங்கள் நிலைக்குழுத் தலைவர் பதவி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டிருக்கிறது
திமுக எம்.பி திருச்சி சிவாவிற்கு தொழில் துறை நிலைக்குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கனிமொழியை உரங்கள் நிலைக்குழுத் தலைவர் பதவியில் இருந்து கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுத் தலைவராக நியமித்துள்ளது மத்திய அரசு. கனிமொழியிடம் இருந்த ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிலைக்குழுத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் குழு நிலைக்குழுத் தலைவர் பதவிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பறிக்கப்பட்டு, மேற்கு வங்க பாஜக எம்.பி லாக்கட் சட்டர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எந்த நிலைக்குழுத் தலைவர் பதவியும் இல்லை.
கல்விக்குழு தலைவராக பாஜக எம்.பி விவேக் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி வகித்து வந்த உள்துறை நிலைக்குழுத் தலைவர் பதவி பாஜக எம்.பி பிரிஜாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜக எம்.பி புபனேஷ்வர் கலிதா சுகாதார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப துறை குழு தலைவராக இருந்து வரும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி வேட்பாளர் சசி தரூருக்கு பதிலாக, சிவசேனா எம்.பி பிரதப்ராவ் ஜாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை நிலைக் குழுத் தலைவர் பதவிகளில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். உள்துறை, நிதி, தொழில்நுட்ப துறை, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் கடந்த ஆட்சி காலத்திலேயே அவரது கனவு திட்டமான ஆதர்ஷ் கிராம யோஜனா அதாவது கிராமங்களைத் தத்தெடுத்தல் திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்றார். அதன்படி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேசபுரத்தை தத்தெடுத்திருந்தார். அங்கே பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டார். மேலும் பல கிராமங்களுக்கும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகும் கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தில் கனிமொழி தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறார். அண்மையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு ஒன்றியத்தில் இருக்கும் தெற்கு இலந்தைக் குளம் கிராமத்தை தத்தெடுத்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, ‘இந்த கிராமத்தில் மட்டுமல்ல தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில்தான் இந்தியா முழுமைக்கும் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் பற்றிய ஆய்வு மேற்கொள்ள அதிகாரம் மிக்க நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பதவியை கனிமொழிக்கு அளித்துள்ளார் பிரதமர் மோடி என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில். இந்த நிலைக்குழுவில் நாமக்கல் கொமதேக எம்பியான ஏ.கே.பி. சின்ராஜ் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கியத்துவம் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பதவிகளில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவின் முக்கியத்துவம் தக்கவைக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லி மீடியாவில் பேச்சு நிலவுகிறது.
வேந்தன், செல்வம்
சிறப்புக் கட்டுரை: ராஜ ராஜ சோழன் இந்துவா?
3வது டி20: ரோசாவ்வின் ஆக்ரோசமான சதம்… தோல்வியை தழுவிய இந்தியா!