மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, கோவை கொடிசியா வளாகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு, தொழில்முனைவோர்கள், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பேசிய ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஸ்வீட், கார உணவு வகைகளுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனை கோவை அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று (செப்டம்பர் 12) சந்தித்த அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விவகாரம் முக்கிய பேசுபொருளாகியுள்ள நிலையில், ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்” என்று திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று.
அதன் நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.
வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம், பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை.
ஆனால், அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அருவெறுப்பானதும் கூட. அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?
உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.
நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும், அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும். சீனிவாசனுக்கு எனது அன்பும்,ஆதரவும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருவாய்… தென்னிந்தியாவில் இருந்து இடம் பிடித்த ஒரே ரயில் நிலையம்!
மதுபான வழக்கு… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
இப்பதான் புரியுது, வட நாட்டு பத்திரிகை எல்லாம் ஜியை ஓவரா ஏன் புகழ்ந்து தள்றாய்ங்கனு