இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு மத்திய பாஜக அரசு தீர்வு காண தயாராக இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி இன்று (பிப்ரவரி 16) குற்றம்சாட்டியுள்ளார். Kanimozhi condemns Bjp fishermen
தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளைச் சிறைபிடித்துத் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசும்போது, “மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 3,544 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வருடம் மட்டும் 77 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு 2 பேர் என்ற அளவில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்கிறது. இன்று வரை 97 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வருதற்கு முன்னாள் மறைந்த பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், கடல் தாமரை போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் தாமரையையும் காணவில்லை, பாஜகவையும் காணவில்லை.
மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? நானும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியும் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பும் போது மத்திய அரசு கண்டுகொள்வதில்லை.

ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கும் போது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால், இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என்ற அளவில் மத்திய அரசு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எத்தனையோ நாடுகளில் மீனவர்கள் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் சுயமரியாதையை கூட மத்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை. எந்த பிரச்சனைகளுக்கும் அவர்கள் தீர்வுகளை காண தயாராக இல்லை” என்று கனிமொழி பேசினார். Kanimozhi condemns Bjp fishermen