திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழியின் 57-ஆவது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜனவரி 5) சென்னையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கனிமொழி தனது பிறந்தநாளை சென்னை சங்கமம் கலைக் குழுவினரோடு நேற்று (ஜனவரி 4) இரவு கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது அங்கிருந்த கலைக்குழுவினர் பறை மேளம் இசைத்து கனிமொழிக்கு ஆட்டம் பாட்டத்துடன் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அண்ணனும் முதல்வருமான ஸ்டாலினிடம் கனிமொழி வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு சென்று முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கனிமொழி பிறந்தநாளை ஒட்டி திமுக மகளிரணி எக்ஸ் வலைதள பக்கத்தில் பொலிட்டிக்கல் மாஸ்டர் கனிமொழி என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் உடையணிந்து பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்றும் கனிமொழி அவர்களுக்கு ஆவேசமாக பாடம் எடுப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் வடிவில் பிறந்தநாள் கேக்கும் தயார் செய்து கனிமொழிக்கு தொண்டர்கள் பிரசன்ட் செய்தனர் . கேக்கை பார்த்ததும் ஒரு நிமிடம் ஷாக்காகி, ‘என்னப்பா இதெல்லாம்’ என்று கேட்ட கனிமொழி பின்னர் கேக் வெட்டி தொண்டர்களுக்கு கொடுத்தார்.
சென்னையின் பல பகுதிகளிலும் பொலிட்டிக்கல் மாஸ்டர் கனிமொழி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல, அறிவாலயத்தில் இருந்து கோட்டை நோக்கி பெரியார், கலைஞரோடு கனிமொழி தலைமையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் செல்வது போன்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், ‘அய்யா கைத்தடியோடு அரியணை நோக்கி வருகிறார் அக்கா கனிமொழி 2026’, ‘திராவிடத்தின் எதிர்காலம்’ என்று திமுக மகளிரணி சார்பில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, என்சிபி சரத்பவார் பிரிவு செயல் தலைவர் சுப்ரியா சுலே, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகிறார் பெ.சண்முகம்
கல்யாணமாகி இரண்டே மாதம்… கணவருடன் விபத்தில் பலியான பெண் எஸ்.ஐ!