திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி வேலூரில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சுமார் 600 மாணவ மாணவிகளுக்குப் பட்டமளித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் கல்வியை முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (நவம்பர் 5) நடைபெற்றது.
16 மற்றும் 17ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தங்க பதக்கத்தையும், பட்டத்தையும் வழங்கச் சிறப்பு விருந்தினராக எம்.பியும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அழைக்கப்பட்டிருந்தார்.
விழா அரங்கில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் துறைவாரியாக முதல் இடம் பெற்ற 12 மாணவர்கள் முதல் வரிசையிலும், அதிக மதிப்பெண் பெற்ற 44 மாணவர்கள் அவர்களுக்கு அடுத்தபடியாகவும், அவர்களைத் தொடர்ந்து துறை வாரியாக 550க்கும் மேற்பட்ட மாணவர்களும் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
திமுக எம்.பி.கனிமொழி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வினோத்குமார், கல்லூரி முதல்வர் எம். பாரதி, ஆலோசகர் நந்த கிஷோர் உள்ளிட்டோர் மேடையில் பட்டம் வழங்கத் தயாராக இருந்தனர்.
பொதுவாகச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்பவர்கள் சிறந்து விளங்கிய 10 மாணவர்களுக்கு அடையாளமாகப் பட்டம் கொடுத்துவிட்டு அமர்ந்துவிடுவார்கள்.
மற்ற மாணவர்களுக்குக் கல்லூரி முதல்வர் அல்லது நிர்வாகம் சார்பில் பட்டமும் சான்றிதழும் வழங்கப்பட்டுவிடும்.
அதன்படியே கனிமொழியும் அடையாளமாக முதல் 10 அல்லது 20 பேருக்குத்தான் பட்டம் வழங்குவார், நாமெல்லாம் அவரது கையால் வாங்கமுடியுமா என்று எண்ணிக்கொண்டே காத்துக்கொண்டிருந்தனர் மாணவர்களும் பெற்றோர்களும்.
அப்படி காத்திருந்த மாணவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக கனிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
12 மாணவ மாணவிகளுக்குத் தங்கப் பதக்கங்கள் உட்பட ஏறத்தாழ 600 மாணவர்களுக்கு நின்று கொண்டே தனது கரங்களால் பட்டங்களை வழங்கினார்.
இந்த சம்பவம் மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் மாணவிகளும், பெற்றோர்களும் கனிமொழியின் கைக்கு முத்தமிட்டுச் சென்றனர்.
முன்னதாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது 3 மணி நேரம் நின்று பெண்களுக்குச் சுழல் நிதி வழங்கினார்.
அதேபாணியில் மாணவ மாணவிகளுக்குக் கனிமொழி சான்றிதழ் வழங்கியிருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய புள்ளிகள்.
வேந்தன், பிரியா
அட்லீயால் ஷாருக்கான் படத்துக்கு சிக்கல் : அதிர்ந்துபோன இந்தி சினிமா!
வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!