காஞ்சிபுரத்தில் நெல்லை ஃபார்முலா…மேயர் ராஜினாமா?

அரசியல்

கோவை, நெல்லை மாநகராட்சிகளுக்கு விரைவில் மேயர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று (ஜூலை 29) காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் யாரும் பங்கேற்கவில்லை.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக இருக்கிறார். எதிர்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி திமுக கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக புகார்களை தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினர்.

இதன் அடுத்த கட்டமாக 33 திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரச் சொல்லி மனு கொடுத்தனர். இதையடுத்து ஜூலை 29 ஆம் தேதி மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார் மாநகராட்சி ஆணையர்.

இதற்கிடையில் திமுகவின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கடந்த வாரம் காஞ்சிபுரம் சென்றார். அங்கே திமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். இதையடுத்து புகார் கொடுத்த திமுக கவுன்சிலர்கள் சொகுசு பேருந்து மூலம் நேற்று  மாமல்லபுரத்துக்கு அனுப்பப்பட்டனர்.

இன்று (ஜூலை 29) காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேயர் உள்ளிட்ட எந்த கவுன்சிலரும் மாமன்றத்துக்கு வரவில்லை.

ஒரே ஒரு கவுன்சிலர் பிரவீன் குமார் மாநகராட்சி கூட்டத்துக்காக வந்தார். ‘ஆணையர் கொடுத்த தகவலின் பேரில்தான் கூட்டத்துக்கு வந்தேன். ஆனால் ஆணையர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

நெல்லை மாநகராட்சியில் இப்படித்தான் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தபோது… அந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட இருந்த நாளில் கவுன்சிலர்கள் யாரும் மாமன்றத்துக்கு வராமல் மதுரையில் தங்க வைக்கப்பட்டனர். இப்போது காஞ்சியிலும் இதேபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் நடக்கவில்லை என்பதால், இனி அடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஒரு வருடம் ஆக வேண்டும். அதற்குள் மேயரை ராஜினாமா செய்ய வைத்து நெல்லை போல மேயர் தேர்தல் நடத்தலாமா என்ற ஆலோசனை திமுக மேலிடத்தில் நடந்து வருகிறது.

வேந்தன்

31 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் : ஆசிரியர்கள் கைது!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எகிறிய வெள்ளி விலை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *