பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்ட திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்குநர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், அதன் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், ‘ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா. சிலையை உடைத்து அகற்றும் நாள்தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்’ என்றார்.
இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலர் குமரன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது இரணடு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக, தனக்கு முன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், கனல் கண்ணன். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை சைபர் கிரைம் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இதில் ஒரு தனிப்படை மதுரையிலும், மற்றொரு தனிப்படை புதுச்சேரியிலும் தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு (ஆகஸ்ட் 14) புதுச்சேரி நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் இன்று (ஆகஸ்ட் 15) கனல் கண்ணனை கைது செய்தனர்.
அவரை, அங்கிருந்து சென்னை அழைத்து வந்த போலீசார், எழும்பூர் நீதிமன்ற 12வது நீதிபதி லட்சுமணன் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’’கனல் கண்ணனை ரிமாண்ட் செய்ய வேண்டாம். அவரை ஜாமீனில் விட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு காவல் துறை தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கனல் கண்ணனுக்கு வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில், கனல் கண்ணனை போலீசார் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது இந்து முன்னணியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் கனல் கண்ணன் சென்ற காவல் வாகனத்தை வழிமறித்து கோஷமிட்டனர்.
என்றாலும், அவர்களை விலக்கிவிட்டு போலீசார் கனல் கண்ணனை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஜெ.பிரகாஷ்
விடுமுறை முடிவு: 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!