காமராஜர் தனது சொந்த காசில் பள்ளிகளைத் திறக்கவில்லை என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பேசியதற்கு காங்கிரஸ் மாணவரணி தலைவர் சின்னதம்பி மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி, திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தற்போது, திமுக மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி இருக்கிறார்.
கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் Dravidian Stocks பதிப்பகத்தின் யாழ் திலீபன் எழுதிய கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல், நெய்வேலி அசோக் மொழிபெயர்ப்பில் அண்ணா எழுதிய நீதிதேவன் மயக்கம் நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல், எம்.எஸ்.விஸ்வநாதன் எழுதிய கர்மவீரரும் கலைஞரும் – திராவிட தலைவர்களின் மதிப்பீடு ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, “குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததால் ராஜாஜி தேர்தலில் தோல்வி அடைந்தார். ராஜாஜி தனது ஆட்சிக்காலத்தில் மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார். காமராஜர் தனது சொந்த நிதியில் இருந்து பள்ளிகளைத் திறக்கவில்லை. அதனால் தான் அவரை கல்வி கண் திறந்த காமராஜர் என்கிறார்கள். தமிழகத்தில் கல்வி என்ற சொத்துக்கு பெரியார் என்ற தனி மனிதர் தான் காரணம்” என்று பேசியிருந்தார்.
ராஜீவ் காந்தி பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் மாணவரணி தலைவர் சின்னத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காமராஜரை பாராட்டிய பெரியார்
திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய, திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, காமராஜரை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். அவர் வரம்பை மீறி, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் மிகுந்த ஆணவத்தோடு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரின் மனம் புண்படுமாறு பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன்.
இப்படி பேசுவதற்கு அவருக்கு எப்படி துணிவு வந்தது என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்த போதே திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களையெல்லாம் நாக்கில் நரம்பின்றி மிகமிக கீழ்த்தரமாக பேசியவர். அங்கிருந்து சீமானால் விரட்டப்பட்டு, திமுகவில் தஞ்சம் புகுந்தவர் தான் ராஜீவ்காந்தி.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவர் காமராஜரைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. காமராஜர் 1954-ஆம் வருடம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 அன்று முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் ஆதரிக்க தொடங்கிய பெரியார், காமராஜர் ஆட்சி செய்த ஒன்பதரை ஆண்டுகாலமும் பாராட்டி பேசியதை எவரும் மறந்திட இயலாது.
பொற்கால ஆட்சியை தந்தவர் காமராஜர்!
1961-ஆம் ஆண்டில் காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு காமராஜரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள், அவரை விட்டால் தமிழர்களுக்கு வேறு ஆளே சிக்காது என்று பேசி 1962 தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரப்புரை மேற்கொண்டவர் பெரியார். அவரும், காமராஜரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே எந்தளவிற்கு காமராஜர் ஆட்சியை எப்படி தாங்கி பிடித்தார் என்ற வரலாறெல்லாம் ராஜீவ்காந்தி போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
1954 இல் காமராஜர் முதலமைச்சரானதும் குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தவிர எவரும் எதிர்த்து போட்டியிடவில்லை. பெரியார் தீவிரமாக ஆதரித்தார். திமுக அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லையே தவிர, அண்ணா குணாளா, குலக்கொழுந்தே என்று எழுதி ஆதரித்தார். இத்தகைய வரலாற்று பின்னணியோடு தான் காமராஜர் தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தார்.
தமிழகத்தில் காமராஜரின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியை பொற்கால ஆட்சி என்று நேரு உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் சான்றிதழ் கொடுத்த நிலையில், அதை உறுதி செய்து தீவிர பரப்புரை மேற்கொண்டவர் பெரியார். ஒருமுறை காமராஜர் ஆட்சியைப் பற்றி குறிப்பிடும் போது, ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்கிறது என்று வாழ்த்தி மகிழ்ந்தவர் பெரியார். அவர் சொல்லித் தான் அன்று முதலமைச்சர் காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்று கூறுவது அரசியல் அறியாமையை காட்டுகிறது.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை காமராஜரின் சொந்த பணத்தை கொண்டா நிறைவேற்றினார் என்று கூறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் இருக்கிறது. இவரைப் போன்றவர்கள் இப்படி பேச திமுக தலைமை அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு இதைவிட பெரும் கேடு இருக்க முடியாது. இத்தகைய வரம்பு மீறி பேசிய ராஜீவ்காந்தியை அடக்கி வைப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்”என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“காமராஜரை இழிவுபடுத்த வேண்டாம்!
காமராஜரை பற்றி திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தியின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. காமராஜர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொண்டு வந்தார் அதற்காக அழகப்பன் கமிட்டி அமைத்து முழுவதுமாக ஆராய்ந்தார்.
6000 மூடிய பள்ளிகளைத் திறந்ததார். 12,000 புதிய பள்ளிகளை திறந்தார். 500 மக்கள் தொகை கொண்ட கிராமம் தோறும் பள்ளிகள் திறந்தார். மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமத்திற்கு ஒரு ஆசிரியர் பள்ளிகள் திறந்தார். பள்ளிகள் திறந்தாலும் பசியோடு குழந்தைகள் படிக்க முடியாது என்பதால் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் 8 ஆண்டுகளில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. கல்விக்கண் திறந்த காமராஜர் செயல் வீரராக இருந்தார்.
அவரின் கல்வித் திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று இருக்கிறது. சொந்த காசிலா அவர் பள்ளிக்கூடங்களை திறந்தார் என்று கேள்வி கேட்கிறீர்களே? பெரியார் பெயரில் இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் தஞ்சை பெரியார் பல்கலைக்கழகம் போன்ற பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது என்பதை உங்கள் தலைவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
திமுகவினரின் இந்த ஆணவ பேச்சுகளால் காமராஜரால் பலன் பெற்ற பலரது மனம் புண்பட்டு இருக்கிறது. கல்விக்கு பெரியார் தான் காரணம் என்று சொல்வது உங்களின் பொய்யுரை. பெரியார் வாய் சொல் வீரராக மட்டுமே இருந்தார். உடனே தமிழக முதல்வர் தலையிட்டு திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியை கண்டிப்பது மட்டுமல்லாமல் இந்த வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். பெரியாரை ஆராதிக்கிறேன் என்று நினைத்து காமராஜரை இழிவுபடுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓடிடியில் வெளியாகும் ’மெய்யழகன்’ – ‘லப்பர் பந்து’ !
மீண்டும் கார் ரேஸராக அஜித் : ஏகே ரேஸிங் அணியின் லோகோ வெளியானது!