மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கியிருக்கிறார்.
ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் கமல்.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல் பிரச்சாரம் செய்யப்போவதாக மக்கள் நீதி மய்யம் கடந்த 24ஆம் தேதி அறிவித்தது.
அதில், “ஈரோடு, சேலம், திருச்சி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு செல்லவிருக்கிறார். மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் கமலின் பிரச்சார பயணம் திட்டமிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது
முதல்கட்டமாக இன்று ஈரோட்டில் பிரச்சாரம் தொடங்குவதை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “ மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து இன்று (மார்ச் 29) மதியம் சேலம் விமான நிலையம் சென்ற கமல்ஹாசன் அங்கிருந்து ஈரோடு சென்றார்.
கமலின் பிரச்சார பயண திட்டத்தை பொறுத்தவரை அதில் காங்கிரஸ் தொகுதி போட்டியிடும் எந்த தொகுதியும் இடம் பெறவில்லை.
இன்றும், நாளையும் ஈரோடு, சேலத்தில் பிரச்சாரம் செய்யும் கமல், காங்கிரஸ் போட்டியிடும் அருகே உள்ள தொகுதியான கரூருக்கு செல்லவில்லை. ஏப்ரல் 3ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்துக்கு செல்லும் கமல், அருகே உள்ள காங்கிரஸ் போட்டியிடும் மயிலாடுதுறைக்கு செல்லவில்லை.
ஏப்ரல் 6,7 ஆகிய தேதிகளில் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் கமல் அருகே இருக்கும் தொகுதியான காங்கிரஸ் போட்டியிடும் திருவள்ளூருக்கு செல்லவில்லை.
மதிமுக போட்டியிடும் திருச்சி, சிபிஐ போட்டியிடும் மதுரை, சிபிஎம் போட்டியிடும் திருப்பூர் என திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு செல்லும் கமலின் பிரச்சார பயண திட்டத்தில் காங்கிரஸ் தொகுதி ஒன்று கூட இடம் பெறவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூட்டணி நிமித்தமாக கமல்ஹாசனை சந்தித்துள்ளார். அப்போது கமலின் பிரச்சாரப் பட்டியலில் காங்கிரஸ் தொகுதிகள் விட்டுப் போயிருப்பதை நேரடியாக சொல்லாத செல்வப்பெருந்தகை, ‘காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கும் நீங்கள் பிரச்சாரம் செய்ய வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கும் செல்லும் வண்ணம் கமல்ஹாசனின் பிரச்சாரப் பயணம் மாற்றப்படலாம் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன், பிரியா
ரூ.11 கோடி வரிபாக்கி : சிபிஐ கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
’அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு’ : ராகுல் காந்தி வாக்குறுதி!