ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்தன.
முதலில் இரு கட்சிக்கும் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 29ஆம் தேதி பெண் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அறிவிக்கப்படும் என கூறினார்.
இதனால் இடைதேர்தலில் பலமுனை போட்டிகளுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள வேளையில், தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியான நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுமா? இல்லையா?.
கமலின் நிலைப்பாடு என்ன என்று கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் சில தொகுதிகளில் சொல்லும் படியான வாக்குகளைப் பெற்றிருந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 இல் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்றிருந்தார்.
அவரைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து போட்டியிட்ட யுவராஜா 58,396 வாக்குகளைப் பெற்றார்.
மூன்றாவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11,629 வாக்குகள் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ராஜ்குமார் 10,005 வாக்குகளைப் பெற்றார்.
இதில் மூன்றாம் இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சிக்கும், நான்காம் இடத்தை பிடித்த கமல் கட்சிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 1,624 மட்டுமே.
இதனால் விட்டதைப் பிடிக்கும் நோக்கில் இடைத்தேர்தலில் கமல் கட்சி போட்டியிடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எனினும் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டி வருகிறார் கமல்ஹாசன்.
கடந்த டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கமல் பங்கேற்றார்.
இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என பேச்சுகள் எழுந்தன.

டெல்லியில் இது தொடர்பாகப் பேசிய கமல்ஹாசன், “பலரும் தேர்தல் கூட்டணி குறித்துக் கேட்கிறார்கள். ஆனால் நான் ஒரு இந்தியனாக இங்கே வந்திருக்கிறேன்.
எனது அரசியல் பயணத்தை எனக்காகத் தொடங்கவில்லை மக்களுக்காகத் தொடங்கினேன்” என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்திருந்தார்.
இந்த சூழலில் தான் காங்கிரஸ் நிற்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா? இல்லையா? அல்லது காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் பொன்னுசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும் என்றும், அதன் தலைவர் கமல்ஹாசன்தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதோடு இந்த தீர்மானம் மின்னஞ்சல் மூலமாக கமல் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஒரிரு தினத்தில் இடைத்தேர்தல் தொடர்பாகக் கமல் அறிவிக்கலாம் என்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தரப்பில் கூறப்படுகிறது.
பிரியா
தமிழ்நாட்டில் பணியாற்றுவது எனக்கு ஒரு பாடம்: ஆளுநர் ஆர்.என். ரவி