டெல்லியில் தொடர்ந்து வரும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த பயணம் கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் தொடர்ந்து வருகிறது.
மொத்தம் 150 நாட்கள் கொண்ட ராகுல்காந்தியின் இந்த நடைபயணத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்துள்ளனர்.
டெல்லியில் கடும் குளிருக்கிடையே 108வது நாளான இன்று காலையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன், அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மாலையில் தொடங்கிய நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். கறுப்பு கலர் கோட் அணிந்து ராகுல்காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவருடன் நூற்றுக்கணக்கான மக்கள்நீதி மய்யம் தொண்டர்களும் இந்த நடைபயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
பின்னர் செங்கோட்டைக்கு முன்பாக நடைபெற்ற திரளான கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றினார்.
முதலில் ஆங்கிலத்தில் பேசிய கமல்ஹாசன்,”நான் இங்கு ஏன் வந்தேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். என் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். எனக்கு பல சித்தாந்தங்கள் இருந்தன. நான் ஒரு நடிகனாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும், இங்கு ஒரு இந்தியனாகவே வந்துள்ளேன்.” என்று பேசி கொண்டிருக்கும் போதே ராகுல்காந்தி, கமல்ஹாசனை தமிழில் பேசுமாறு கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தமிழில் பேச, கரூர் எம்பி ஜோதிமணி ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்தார்.
அப்போது அவர், “ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என்று முன்னதாக அடையாளப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்காக அவரை எனது சகோதரனாக நான் கருதவில்லை. மாறாக இது இரண்டு கொள்ளுப் பேரன்மார்கள் கலந்து கொள்ளும் யாத்திரை. அவர் நேருவின் வழியில் வந்தார். நான் காந்தியின் வழியில் வந்திருக்கிறேன்.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய நாட்டின் அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் நான் தெருவில் வந்து நிற்பேன். நான் அதற்காகவே இந்த யாத்திரையில் பங்கு கொண்டுள்ளேன்.
நான் இங்கு வருவதற்கு முன்னதாக பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள். நீங்கள் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு சென்றால் உங்களது அரசியல் பயணத்தை பாதிக்கும் என்று கூறினார்கள். எனது அரசியல் பயணம் எனக்காக உருவானது இல்லை. நாட்டுக்காக உருவானது.
நான் ராகுல்காந்தி யாத்திரை தொடங்கிய இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டில் வாழும் குடிமகன் தான். இந்த யாத்திரை இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் இது பல நூறு தூரம் செல்ல வேண்டி உள்ளது.
நான் நடந்து வந்த கிலோ மீட்டர் கணக்கை பற்றி பேசவில்லை. மாறாக இந்த நடை பயணமானது நமது பாரம்பரியமிக்க வரலாற்றிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இது ஒன்றும் ஐந்தாண்டு திட்டமல்ல. இது அதையும் தாண்டி அடுத்து வர இருக்கும் தலைமுறைகளுக்கானது.
நாடு என்று வரும் பொழுது இங்குள்ள பல்வேறு கட்சிகளின் கட்சி கொடிகளின் நிறங்கள் தாண்டி, நமக்கு தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறங்களே தெரிய வேண்டும். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.
நான் ராகுல் காந்தியை மிகவும் மதிக்கிறேன். அவரின் துணிச்சலான இந்த முடிவையும், மாநிலங்கள் தாண்டிய இந்த நடைபயணத்தையும் நான் ஆதரிக்கிறேன். அதற்கு வாழ்த்து கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெய் ஷாவுக்கு எதிர்பாராத பரிசு கொடுத்த மெஸ்ஸி.. ரசிகர்கள் குழப்பம்!