டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணிக்குள் கமல்- காய் நகர்த்தும் ஸ்டாலின் 

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், எந்த செய்தியும் வந்து விழவில்லை. அதன் பிறகுதான், டேட்டா காலியாகியிருந்தது தெரிந்தது.  உடனே கூகுள் பே மூலம் ப்ளான் ரீசார்ஜ் செய்த பிறகு  மளமளவென செய்தித் துளிகள் விழுந்தன. அதில் ஒரு போட்டோ,  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலும்,  திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போட்டோ.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”சமீப காலமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து வருகிறார்.  இருவரும் தனியாகவே நிறைய நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தை வெளியிட்டது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான். இதன் மூலம் கமலுக்கும் உதயநிதிக்கும் நெருக்கம் அதிகமானது. எந்த அளவுக்கு நெருக்கமானது என்றால் உதயநிதியை நாயகனாக வைதது அடுத்த  படத்தை தயாரிக்கிறது கமலின் ராஜ் கமல் நிறுவனம்.  உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 ஆவது ஆண்டு விழாவில் இதை கமல்ஹாசனே அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் உதயநிதியுடனான இந்த கமலின் நெருக்கம் வெறும் சினிமா அளவில்தானா அதையும் தாண்டி புனிதமானதா என்ற கேள்விகள் திமுக, மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.  இதுபற்றி விசாரித்தபோது உதயநிதி- கமலின் நட்பு வெறும் சினிமாவுக்குள் முடங்கக் கூடியதல்ல என்றும் அது அரசியலிலும் தொடர வாய்ப்புகள் நிறைய இருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல்வாதியாக கமல்ஹாசன் அறிமுகமானார். மக்கள் நீதி மய்யம்  கட்சியைத் தொடங்கிய ஒரு வருடத்துக்குள் அவர் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இந்தத் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை என்றாலும்  38  தொகுதிகளில் அவரது கட்சி போட்டியிட்டது. ஐந்து எம்பி தொகுதிகளில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வாங்கிய கமலின் கட்சி  3.71 சதவிகித வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக நகர்ப்புறங்களில் கமலுக்கு கணிசமான ஆதரவு இருந்தது. இதை திமுக, அதிமுக இரு கட்சிகளுமே கவனித்தன.

இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தில் கமல்ஹாசனை  எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என்று திமுக முயன்றது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளையான சபரீசனே கமல்ஹாசனை இது தொடர்பாக சில முறை சந்தித்தார். பிரசாந்த் கிஷோர் முதலில் கமலின் கட்சிக்கு வேலை பார்த்தார்.  அதன் பிறகே அவர் திமுகவுக்கு வந்தார். கமலின் முக்கியத்துவத்தை அவரும் திமுகவிடம் எடுத்துக் கூறியிருந்தார். இதையடுத்து கமலை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

குறிப்பாக கொங்கு பகுதியில் திமுக வீக் ஆகவே இருக்கிறது. இந்த நிலையில் கமல் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலில்  கௌரவமான வாக்குகளை வாங்கியிருந்தார்.  கமலை திமுக கூட்டணிக்குக் கொண்டுவந்தால் கொங்கு பகுதியில் அதிமுகவை சமாளிக்க முடியும் என்று  சபரீசன் வியூகம் வகுத்தார். அதற்கான செயல்பாடுகளிலும் இறங்கினார். அதேநேரம் அப்போது எடப்பாடிக்கு ஆலோசகராக இருந்த சுனிலும் கமல்ஹாசனை சந்தித்தார். அவரது திட்டம், கமலோடு அதிமுக கூட்டணி வைப்பதல்ல, எக்காரணத்தைக் கொண்டும் திமுகவோடு கூட்டணி வைத்துவிடாதீர்கள்… அப்புறம் அரசியலில் விஜயகாந்த் மாதிரி ஆகிவிடுவீர்கள் என்று கமலிடம் சுனில் தெரிவித்ததாக அப்போதே பேச்சு உண்டு. அந்தத் தேர்தலில் கமல் திமுக, அதிமுகவோடு கூட்டணி வைக்காமல் சமக, ஐஜேகே என ஒரு கூட்டணியை அமைத்தார். சபரீசன் கணித்தது போலவே கொங்கு பகுதியில் திமுகவின் பலவீனம் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.

இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டது திமுக.  இப்போது முன்பை விட கொங்கு பகுதியில் அதிமுக பலமாக இருக்கிறது. எடப்பாடி  பழனிசாமி, வேலுமணி போன்றோர் அதிமுகவுக்குள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் கொங்கு பகுதி திமுகவுக்கு சவாலாகத்தான் இருக்கப் போகிறது. எனவே  முக்கியமாக கமல்ஹாசனை திமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை சபரீசனும், உதயநிதியும் தத்தமது வகைகளில் தொடங்கிவிட்டனர்.  

அண்மையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் தமிழக ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளை முறைப்படி அழைக்கவில்லை என்று வருத்தம் அந்தக் கட்சிகளிடையே இருக்கிறது.  காங்கிரசோ மோடியைக் காட்டி இந்த துவக்க விழாவை புறக்கணித்துவிட்டது. இந்த தொடக்க விழாவில் எல்லாருமே  பாராட்டிய ஒரு நிகழ்வு தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஆண்டு கலாச்சார வாழ்வியலை நிகழ்த்துக் கலை வடிவில் ஆங்கிலத் தொகுப்பாக வெளியிட்டதுதான். இந்த தொகுப்பின் உயிரே கமல்ஹாசன் தான்.  அவர்தான் தமிழர்களின் பெருமைகளை உலகமே அறியும் வகையில் உணர்ச்சிகரமான ஆங்கிலத்தில் உயிர்ப்பித்துக் கொடுத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கமலுக்குக் கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் தமிழ்நாட்டின் அரசியல் சதுரங்கத்திலும் முக்கிய காய் நகர்த்தலாக கவனிக்கப்படுகிறது.

மோடியை கமல்ஹாசன் கடுமையாக எதிர்த்து வருகிறார்.  நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு வந்தபோது மோடியை ஹிட்லர் என்று சாடினார் கமல். ஆக மோடி எதிர்ப்பில் கமல் உறுதியாக இருக்கிறார். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை கால் பதிக்கவிடாமல் தடுப்பதற்கான மெகா கூட்டணியில் கமலையும் ஓர் அங்கமாக ஆக்க  திமுக தரப்பு தீவிரமாகிவிட்டது.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன்,  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் சென்னையிலேயே ஒரு தொகுதியை அவருக்காக தரக் கூட தயாராக இருக்கிறது திமுக.   சினிமாவில் தேசிய கவனத்தைப் பெற்ற கமல்ஹாசன் நாடாளுமன்றம் சென்று அரசியலிலும் தேசிய கவனத்தைப் பெறலாம் என்ற ஒரு முன்னெடுப்பை முன்மொழிந்திருக்கிறது திமுக. இதுகுறித்து கமல்ஹாசன் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. 

ஆனால்  எப்படியாவது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் கமலை இணைத்து மோடிக்கு எதிரான ஓர் பிரச்சார பீரங்கியாக  அவரை பயன்படுத்த ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். இந்தத் தகவலை ஸ்மெல் பண்ணிதான் இப்போதே கமல், உதயநிதி ஆகியோரைச் சுற்றி ரெய்டு வளையங்களை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்பது கூடுதல் தகவல்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

அதிமுக வழக்கு: பன்னீர்செல்வம் பல்டி: மாற்றப்படுகிறாரா நீதிபதி?

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.