டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் கமலா… அதிபர் ரேஸில் முந்துவது யார்? அதிரடி சர்வே ரிப்போர்ட்!

அரசியல் இந்தியா

இந்திய மக்களவைத் தேர்தலை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்று நோக்கியுள்ளது.

அமெரிக்காவில் ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கும் ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அப்போது அதிபராக இருந்த குடியரசு கட்சி தலைவர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார்.

ட்ரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். பைடனின் பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் களமிறங்கியுள்ளார். அதே சமயம் விவாதங்களில் சொதப்பல், பேச்சில் உளறல், நடவடிக்கைகளில் தடுமாற்றம் என தொடர் பின்னடைவுகளைச் சந்தித்த பைடனை, சொந்த கட்சி உறுப்பினர்களே அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலியுறுத்தினர்.

எனினும், ‘ட்ரம்பை இந்த தேர்தலிலும் வீழ்த்தி காட்டுவேன்’ என்று கூறி வந்த பைடனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 81 வயதாகும் பைடன் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், கடந்த ஜூலை 21ஆம் தேதி அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இளம் தலைமுறையினருக்கு வழி விட வேண்டும் என்று கூறியிருந்த பைடன், கமலா ஹாரிஸுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

பைடனின் முழு ஆதரவைத் தொடர்ந்து விஸ்கான்சின் பகுதியில் தனது முதல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது, அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், கருக்கலைப்பு மருத்துவ சிகிச்சைகளை பெற எளிமையான முறையை ஏற்பாடு செய்தல், வறுமையான சூழலில் வாழும் குழந்தைகளுக்கான திட்டம் ஆகியவற்றை தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.

கமலா vs ட்ரம்ப்

மறுபக்கம் எதிர்க்கட்சியான ட்ரம்பை கடுமையாக தாக்கி பேசிய கமலா ஹாரில், ‘ட்ரம்ப் ஒரு குற்றவாளி… இந்த தேர்தல் என்பது ஒரு குற்றவாளிக்கும், முன்னாள் வழக்கறிஞருக்கும் இடையே நடப்பது” என 3000 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசினார்.

மில்வாக்கி புறநகர் பகுதியில் நடந்த பரப்புரையின் போது தனது வழக்கறிஞர் அனுபவத்தை பற்றி கூறியதுடன், ‘சொந்த நலனுக்காக விதிமுறைகளை உடைக்கும் ஏமாற்றுக்காரர்கள் என பல குற்றவாளிகளை நான் பார்த்திருக்கின்றேன்.

அந்தவகையில் ட்ரம்ப்பையும் நான்’ அறிவேன் என்று கூறிய போது, கூட்டத்தில் இருந்தவர்கள் கமலா, கமலா என கோஷம் எழுப்பினர்.

இந்தசூழலில் மக்கள் மத்தியில் கமலாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மறுபக்கம் கமலாவுக்கும் ட்ரம்ப் பதிலடி கொடுத்தார். ‘கமலா ஹாரிஸ் தொடும் எல்லாம் அழிவைத்தான் சந்திக்கின்றன. 2 கோடி வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைய அனுமதித்தவர்கள் என்று கடும் குற்றம்சாட்டை கமலா ஹாரிஸ் மீது சுமத்தியுள்ளார்.

இவ்வாறு கமலாவா? ட்ரம்ப்பா? என அமெரிக்க தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய சூழலில் கமலா ஹாரிஸுக்கே அதிகளவு ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

ட்ரம்பை முந்திய கமலா

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நிறுவனம் ஆன்லைனில் 1,018 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உட்பட மொத்தமாக 1,241 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் ட்ரம்ப்பை காட்டிலும் கமலா 2 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார். அதாவது ஜூலை 21 பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அடுத்த இரு தினங்களில் (ஜூலை 22, 23) நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவில் கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவை பெற்றுள்ளார். ட்ரம்புக்கு 42 சதவீத ஆதரவுள்ளது.
இதற்கு முன்பு ஜூலை 16 கருத்து கணிப்பு படி, இருவரும் 44 சதவிகிதத்துடன் சமநிலையில் இருந்தனர்.

ஜூலை 1ஆம் தேதி கருத்துகணிப்பு படி, கமலா ஹாரிஸ் 42 சதவீத ஆதரவை பெற்றிருந்தார். ட்ரம்புக்கு 43 சதவீத ஆதரவு இருந்தது. ட்ரம்பை காட்டிலும் 1 புள்ளி பின்னால் இருந்த கமலா தற்போது 2 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார். முன்னதாக ட்ரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோ பைடன் 2 புள்ளி குறைவாக இருந்தார்.

தற்போது கமலா ஹாரிஸுடன் ஒப்பிடுகையில் ட்ரம்ப் 2 புள்ளிகள் குறைவாக இருக்கிறார். இதன்மூலம் ட்ரம்புக்கு சவால் அளிக்கக் கூடிய போட்டியாளராக கமலா கருதப்படுகிறார்.

அமெரிக்காவை ஆள்வாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் கமலா ஹாரிஸ் பூர்வீகம் இந்தியா. இவரின் தாய் வழி தாத்தா பி.வி.கோபாலன். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர். இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர்.

இவரது மகள் சியாமளா கோபாலன் ஜமைக்காவைச் சேர்ந்த பேராசிரியர் டொனால்ட் ஜே ஹாரிஸை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள்தான் கமலா ஹாரிஸ்… தங்கை மாயா.

இவர் சிறுவயதாக இருந்த போதே பெற்றோர் விவகாரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் தனது தாய் உடன் வசிக்கத் தொடங்கினார். பின்னர் வழக்கறிஞராக வெற்றிநடை போட்ட கமலா ஹாரில் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில் தனது தாத்தாவின் கைபிடித்து சென்னை கடற்கரையில் நடந்தது உள்ளிட்ட நினைவலைகளை பகிர்ந்திருந்தார்.

துணை அதிபராக வெற்றி பெற்ற பின், தமிழகத்தில் இருந்து கமலாவுக்கு வாழ்த்து மடல்கள் பறந்தன.

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஒரு தமிழ்ப் பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை, உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது என்று வாழ்த்தியிருந்தார்.

கமலா ஹாரிஸ் தனது பூர்வீக இடமான துளசேந்திரபுரம் கிராமத்துக்கு வந்ததில்லை. அவருக்கு சொத்து, உறவு என யாரும் தற்போது துளசேந்திரபுரத்தில் இல்லை. எனினும் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அந்த கிராம மக்கள் துளசேந்திரபுர தர்ம சாஸ்தா கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர். கமலாவின் புகைப்படத்துடன் ‘வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ என்று பிரம்மாண்ட பேனர்களையும் அடித்து வைத்துள்ளனர்.

அதிபர் ரேஸில் கமலா போட்டியிட்டு வெற்றி பெற்றால், அமெரிக்காவை ஆளும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை பெறுவார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தீயணைப்புத்துறைக்கு புதிய வாகனங்கள்… சாதனைகளை லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

சிறைவாசிகள் பயன்பாட்டிற்காக 1 லட்சம் புத்தகங்கள்: தமிழக அரசு

 

+1
1
+1
3
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *