உலகநாயகன் பட்டத்தை துறந்த கமல்ஹாசனை விமர்சித்த தமிழிசை செளந்தரராஜனுக்கு மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் கடந்த 12ஆம் தேதி பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “மத்திய அரசின் திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி திமுக அரசு பெயர் மாற்றி வந்தது. தற்போது, ‘உலக நாயகன்’ பெயரையும் மிரட்டி மாற்ற வைத்து விட்டனர்.
உதயநிதி நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் வந்துவிடுவார் என்று பயந்து போய் மாற்ற வைத்து விட்டார்கள். அவரும் இப்போது திமுக காரராகவே மாறி விட்டார்.
தமிழக அரசியலில் மிரட்டல், உருட்டல், பெயர் மாற்றம், ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்றவைதான் நடக்கின்றனவே தவிர, உருப்படியாக எதுவும் நடக்கவில்லை” என்று பேசியிருந்தார்.
தமிழிசையின் இந்த பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அரைவேக்காட்டுத்தனமான விமர்சனம்!
அவர், “உலகநாயகன் பட்டத்தை துறந்தது, தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு.
இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழிசைக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சௌந்தராஜன், நம் தலைவர் கமல்ஹாசன் உலகநாயகன் என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நின்று எம்பி ஆகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சௌந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர்” என முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsSA : வெற்றியுடன் துவங்கிய திலக் வர்மாவின் முதல் சதம்!
பயிர்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும்: முதல்வருக்குக் கடிதம்!
Comments are closed.