வடகிழக்கு பருவமழை : ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி!

அரசியல்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பிறகு மக்களுக்கு உணவும், நிவாரணப் பொருட்களும் தருவது தீர்வாகாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் இன்று (அக்டோபர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சராசரி மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா?

kamal haasan urge dmk govt to finish storm water drain works

2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, வடகிழக்குப் பருவமழை மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாட்களும், உணவுக்கும், தண்ணீருக்கும்கூட பரிதவித்த சூழலும் இன்னும் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை.

தற்போது ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலைகுலைந்து போகிறது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகளில் நுழையும் கழிவுநீரால் மக்கள் துயரமடைகின்றனர்.

சிறு மழைக்கே பெரும்பாலான மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. `ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் பல்லாயிரம் கோடி செலவழித்தும், பாதிப்பைத் தடுக்க முடியவில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்து போயுள்ளன.

அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், நதிகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நீரோட்டத்தைத் தடுக்கின்றன.

kamal haasan urge dmk govt to finish storm water drain works

பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ள சூழலில், வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது?

சென்னையில் வெள்ள நிவாரணத் திட்டங்கள் மற்றும் நீண்ட கால நீர் மேலாண்மைத் திட்டங்கள் வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு, தங்களது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தெளிவில்லை.

வெள்ளம் சூழ்ந்த பிறகு உணவும், நிவாரணப் பொருட்களும் தருவது தீர்வாகாது. மாநிலம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, மழை வெள்ளம் தங்கு தடையின்றிப் பயணிக்க நடவடிக்கை எடுப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

கடந்தகால அவதிகளையும், துயரங்களையும் மக்கள் மீண்டும் அனுபவிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செல்வம்

மது அருந்தினால் பணி நீக்கம்: பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை!

சீமான் பிளேலிஸ்டில் மல்லிப்பூ பாடல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *