திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும், திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான போர் முழக்கத்தை முன் வைத்து முனைப்போடு தொடங்கப்பட்ட இயக்கம் திமுக. பெரியார் தந்துவிட்டுச் சென்ற திராவிடச் சித்தாந்தத்தை அண்ணாவும், கலைஞரும், ஸ்டாலினும் தோளில் சுமக்கத் துவங்கி 75 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளாய் இம்மண்ணில் நீடித்த தீண்டாமை எனும் கொள்ளை நோய்க்கும், ஆதிக்கம் எனும் தொற்று நோய்க்கும், ஏற்றத் தாழ்வு எனும் புற்றுநோய்க்கும் 75 வருடங்களாகத் திமுக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு, எனது நண்பர் ஸ்டாலின் கைகளில் திமுக மென்மேலும் மெருகு கூடி, இந்திய நாடெங்கும் திராவிடச் சிந்தனைகள் பொலிகின்றன. வட மாநிலங்களும் ஸ்டாலினின் திராவிட மாடல் திட்டங்களைச் செயற்படுத்த முனைப்புக் காட்டுகின்றன என்பது தமிழர்கள் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.
ஆபத்தான சித்தாந்தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, மாநிலத் தன்னாட்சியைப் பாதுகாக்க ஒரு கோட்டைச் சுவர் போல எழுந்து நிற்கும் இயக்கம்தான் திமுக.
இந்தக் கோட்டை இங்கிருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கலைக் கூட எவரும் எடுத்துச் செல்ல முடியாது. அனைத்துச் சமூக இயக்கங்களைப் போலவே திமுகவும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது.
ஆனால், தமிழர் நலன் காக்கும் பணியில் சோர்வுற்றதே இல்லை. பிறப்பினால் அனைவரும் சமம் எனும் சமூகநீதிச் சித்தாந்தத்தைத் தலையில் கிரீடமாகச் சூடி, தான் தேர்ந்து கொண்ட செயல்களில் சற்றும் தொய்வுறாமல் நிமிர்ந்து நடைபோட்டு வரும் திமுகவின் பவளவிழாக் காலத்தில், அதன் பணிகளில் கூட்டிணைந்து செயல்பட வேண்டியது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் கடமை.
சகோதரச் சக்திகளுக்கு இடையே ஏற்படும் சிறு முரண்கள் கூட மதவாதச் சக்திகளுக்குச் சாதகமாகி விடும் ஆபத்து இருக்கிறது என்பதை உரக்கச் சொல்ல மக்கள் நீதி மய்யம் கடமைப்பட்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் நான் நடித்த சத்யா படத்தில்“பாரத நாட்டுக்கொரு கோட்டைச் சுவர் நாமாக… ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக” என கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இந்தக் கோட்டைச் சுவரில் எங்கேனும் ஒரு கீறல் விழாதா என எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம், அவர்களது பகற்கனவுகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.
இன்றையப் பெருவிழாவில், தவிர்க்கவே இயலாத காரணங்களால் என்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லையே என்ற மனமார்ந்த வருத்தம் எனக்குள் இருக்கிறது. மற்றொரு புறம் விழாக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
எனது சார்பாக இந்தப் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தார் கலந்துகொண்டிருப்பதில் உவகை அடைகிறேன். எழுபத்தைந்து ஆண்டுகள் கண்ட திமுக இன்னும் பல நூறாண்டுகள் செழித்துத் துலங்க வேண்டும். தன் சமூகக் கடமைகளை ஆற்றியபடியே இருக்க வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன்.
அதைச் செய்து காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் இளைய தலைமுறைக்கும் இருக்கிறது என்பதை என் அருமைத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது இளைஞர் படைக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜி
வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை… அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!