மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்றது.
இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றினார்.
பின்னர் அவர் பேசியபோது, “கோவையில் 90,000 பேர் வாக்களிக்காததால் நான் தோல்வியை சந்தித்தேன். இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வாக்களிப்பதில்லை.
என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக பயணித்துக்கொண்டே இருப்பேன்.
தேசத்தின் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. அதனால் கட்சி வரைகோடுகள் இவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். தேசம் தான் முதல்.
இன்று விவசாயிகளுக்கு தமிழகம் செய்திருக்கூடிய நன்மையில் 10 சதவிகிதம் கூட மத்திய அரசு செய்யவில்லை. நாட்டை படையெடுக்க வரும் எதிரிப்படைக்கு என்னென்ன வரவேற்புகள் கிடைக்குமோ, அது தான் விவசாயிகளுக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது.
அதேநேரத்தில் இங்கே நாம் விவசாயிகளை மதித்துக்கொண்டிருக்கிறோம். இந்த வித்தியாசம் அண்ணா காலத்தில் இருந்து தெரிந்துகொண்டிருக்கிறது.
தெற்கு தேய்ந்தால் பரவாயில்லை என்று மத்திய அரசு நினைக்கிறது. அது தவறு. நாம் செய்த தேச தொண்டிற்காக இன்று தண்டிக்கப்படுகிறோம்.
வருமானம் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறது என்று மத்திய அரசு கணக்கெடுக்கட்டும். நாம் கொடுக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா தான் திரும்பி வருகிறது. மத்திய பிரதேசம், பிகார், உத்தரபிரதேசத்திற்கு ரூ.4 கிடைக்கிறது.
அனைவருக்கும் சமமான உரிமை கிடைக்க வேண்டும். ஏழ்மை நிரந்தரமல்ல, நீங்கள் நினைத்தால் மாற்றக்கூடிய ஒன்று தான்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவு: தலைமை நீதிபதி சந்திரசூட் இரங்கல்!
ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த விலை… ஒரு கிராம் எவ்வளவுன்னு பாருங்க!