அ.தி.மு.க வின் அதிகாரபூர்வ நாளிதழான ’நமது அம்மா’ வின் புதிய ஆசிரியராக கல்யாணசுந்தரம் பொறுப்பேற்க உள்ளார்.
ஜெயலலிதா இருந்த வரை ஆசிரியராக பணியாற்றிய மருது அழகுராஜ், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் சென்ற நிலையில், அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர், ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அ.தி.மு.க தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், கட்சிக்கான அதிகாரப்பூர்வ நாளிதழாக (பிப்ரவரி 24 ) 2018 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ’ நமது அம்மா ’ நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழ் தொடங்கப்பட்டது முதல் அதன் ஆசிரியராக இருந்து வந்தவர் மருது அழகுராஜ்.
“நதிகாக்கும் இரு கரைகள் என்னும் என் போன்றோரது நம்பிக்கை , சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் ’ நமது அம்மா ‘ நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்று ஜூன் 29 ஆம் தேதி மருது அழகு ராஜ் அறிவித்தார்.
”அம்மாவின் மறைவுக்கு பிறகு எழுத்துப்பணியே வேண்டாம் என்று கருதி ஒதுங்க நினைத்தேன். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் என்னை அழைத்து நீங்கள் தான் ஆசிரியராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். அது வெளியுலகத்திற்கு அதிமுக கட்சி பத்திரிகை போன்று தெரிந்தாலும் அது உண்மையில்லை. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கோயம்புத்தூர் காரர் தான் அந்த நாளிதழுக்கு அதிபர். அவர் பெயர் சந்திரசேகர்” என்று கூறி அதில் இருந்து விலகினார் மருது அழகுராஜ்.
’நமது அம்மா ’ நாளிதழின் புதிய ஆசிரியர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் , அக்கட்சியின் செய்திதொடர்பாளரும் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேராசிரியர் கல்யாண சுந்தரம் ஆகஸ்டு 4 ஆம் தேதி,
”நமது அம்மா நாளிதழில் பணியாற்றும் செயல் வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறேன். திமுக அரசின் அதிகார ஆக்டோபஸ் கரங்கள் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தை சுற்றி வளைத்து விடியா திமுக அரசிற்கு சாதகமான மக்களுக்கு விரோதமான பொய் பிரச்சாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிற இக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் உண்மையான செய்திகளையும், மாற்று கருத்துக்களையும் கொண்டு செல்லவேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. அதனையும் விரைவாகவும், முழு மூச்சுடனும் செய்தாக வேண்டும்.
ஒரு சின்ன நாளிதழ் தானே, என்ன மாற்றத்தை செய்து விடப்போகிறது? என்று எண்ணாமல் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக அரசின் பொய் பிரச்சார கோட்டையை உடைக்க பயன்படுத்துவதே காலச் சிறந்தது. இதனை நிறைவேற்ற கழகத்தினர் உளமார உறுதி ஏற்போம்.
இத்தகைய மேலான பொறுப்பை வழங்கிய முன்னாள் முதல்வரும் கழகத்தின் இடைக்காலப்பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணிக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் கடிதம்!