கல்வராயன் மலையை சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கு முதல்வரோ அல்லது அமைச்சர் உதயநிதியோ ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் சென்று பார்வையிட வேண்டும் என உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 24) அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தை அடுத்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “முன்னாள் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், தென் ஆற்காடு, சேலம் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை மலையாளி ஜாகிர்தர்களான சடைய கவுண்டன், குரும்ப கவுண்டன், ஆர்யா கவுண்டன் ஆகியோரின் மூதாதையர்களுக்குப் பரிசாக அளித்துள்ளார்.
முதல் இரண்டு ஜாகிர்தார்களுக்கு (மினி ஆட்சியாளர்கள்) பரிசாக வழங்கப்பட்ட பகுதிகள் தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழும், மீதமுள்ளவை சேலம் மாவட்டத்தின் கீழும் வந்தன. பரிசளிக்கப்பட்ட நிலம் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது, மேலும் மூன்று ஜாகிர்தர்கள் நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்படும் வரை இந்தியாவின் எல்லைக்குள் சேர மறுத்துவிட்டனர். ஜூன் 25, 1976 அன்றுதான் அப்பகுதிகளை அப்போதைய தென் ஆற்காடு கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்போதும் அமிகஸ் கியூரி கே.ஆர். குக்கிராமங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களை தோளில் சுமந்து கொண்டு 30 முதல் 40 கி.மீ தூரம் வரை பிரதான சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது” என தமிழ்மணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருகிறது என தெரிவித்தார். மேலும் அதனை வரும் 26ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு தமிழக அரசிற்கு பல அறிவுத்தல்களை வழங்கியது.
”வழக்கறிஞர் தமிழ்மணி தாக்கல் செய்துள்ள அறிக்கையை விரிவாக முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும்.
கல்வராயான் மலையை சுற்றியுள்ள கிராம மக்கள் 1996 வரை வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தவில்லை. இந்தக் குக்கிராமங்களில் முதன்முறையாக 1996-ல்தான் தேர்தல் நடத்தப்பட்டது. அவ்வளவு காலமாக அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தன என்பது எங்களுக்குத் தெரியாது ”என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.
தொடர்ந்து அவர், “கள்ளச் சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து, ரேஷன் கடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
கல்வராயன் மலைப் பகுதியாக உள்ளதால் அந்தப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
நீதிபதிகள் குக்கிராமங்களுக்குச் செல்வது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. எனவே தமிழக முதல்வரோ அல்லது அமைச்சர் உதயநிதியோ ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் உடன் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
முதல்வர் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட்டால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும்” என கூறி வழக்கு விசாரணையை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு… நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் : 18 பேர் பலி!