கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று (ஆகஸ்ட் 24) அதிமுக போராட்டம் நடத்துகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ், தேனி, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளை, பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதனைக் கண்டித்து மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் இப்பள்ளிகளைப் பள்ளி கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தெரிவித்தது.
எனினும் திட்டமிட்டப்படி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்றிரவு அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் விடுதிகளை பள்ளிகல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியின் முதல் படியாக இணை இயக்குநரின் (கள்ளர் சீரமைப்பு) தனித்துவமான கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு விடுதிகளை கள்ளர் சீரமைப்புத் துறையின் நிர்வாகத்திலிருந்து விடுவித்து,
அதன் அதிகாரத்தை மழுங்கடிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசின் அரசாணை 40/2022- ஐ கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக மூன்று நாட்களுக்கு முன்பே (20.08.2024) அறிவித்திருந்த நிலையில்,
திமுக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுக-வுடன் அனைத்து சமுதாய அமைப்புகளும், தோழமைக் கட்சிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டமாக வலுப்பெறும் என்பதை உளவுத்துறை முலம் அறிந்ததால், வழக்கம் போல மாற்றி மாற்றிப் பேசி தன் நிர்வாக குளறுபடிகளை மறைக்க முயலும் விடியா திமுக அரசின் வித்தைகள் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.
நாணய வெளியீட்டு விழாவை “மத்திய அரசு நடத்தியது” என்று பச்சைப்பொய் பேசிவிட்டு, தன்னுடைய பொய் அம்பலப்பட்டுவிட்டதும் “மத்திய அரசு கட்டுப்பாட்டில் நிகழ்ச்சியை மாநில அரசு தான் நடத்தியது” என மாற்றிப் பேசி சமாளிக்க முயன்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிடும் வெற்று அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் மக்களும் அஇஅதிமுக-வும் நம்புவதாக இல்லை.
திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளால் அச்சத்தில் உள்ளதாக கள்ளர் சமுதாய அமைப்பினர் முறையிட்டதன் அடிப்படையிலேயே, மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து இப்போராட்டத்தினை அதிமுக முன்னெடுத்துள்ளது.
இப்பிரச்சனைக்கு மூலக்காரணமாகக் கருதப்படும் “இணை இயக்குநரால் (கள்ளர் சீரமைப்பு) மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளான விடுதிகளின் நிர்வாகம், அன்றாட பணிகளை மேற்பார்வையிடுதல், ஆய்வுகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றம் செய்து”,
அதன் மூலம் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) கட்டுப்பாட்டில் இருந்து கள்ளர் சீரமைப்பு விடுதிகளைப் பறித்து, கள்ளர் சீரமைப்புத் துறையின் அதிகாரத்தை மழுங்கடிப்பதன் மூலம், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் 30.5.2022 அன்று திமுக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 40-ஐ ரத்து செய்வதும்,
கள்ளர் சமுதாய அமைப்பினர் மற்றும் மக்களின் அச்சத்தை விலக்கும் வண்ணம், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாக முறை எந்த அறிக்கையின் அடிப்படையிலும் மாற்றம் எதுவும் செய்யப்படாது என்பதை வெற்று அறிக்கையாக இல்லாமல் உணர்வுபூர்மான நடவடிக்கைகள் மட்டுமே நிரந்தர தீர்வை உருவாக்கும் .
மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயங்களுள் ஒன்றான பிரமலைக் கள்ளர் சமுதாயத்தின் வரலாற்று ரீதியான கல்வி அடையாளமாகத் திகழும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க விடியா அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கும் வரை நிச்சயம் போராட்டம் தொடரும்” என்று அறிவித்துள்ளார்.
மதுரையில் இன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்: அரசு விளக்கம்… போராட்டம் தொடரும் – எடப்பாடி திட்டவட்டம்!