கள்ளக்குறிச்சி எஸ்.பி, கலெக்டர் பணியிடமாற்றம்!

அரசியல்

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 13 ஆம் தேதி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதை ஒட்டி தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 17 ஆம் தேதி  அரங்கேறிய கலவரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி செல்வகுமார், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் இன்று (ஜூலை 19) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் அந்தப் பள்ளியில் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று ( ஜூலை 19 ) அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசீர்வாதம், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தனியார் பள்ளியில் வன்முறை நடைபெற்றதற்கான காரணம் என்ன, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்குக் குழு அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக (எஸ்பி)  இருந்த செல்வகுமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராகவும்,  புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

க.சீனிவாசன்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *