கள்ளக்குறிச்சி கலவரம்:  விடை தெரியாத கேள்விகள்!

அரசியல்

தற்போது மாணவி ஸ்ரீமதி மர்ம மரணமடைந்த  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் மெட்ரிக் பள்ளி மீது  கடந்த 17 வருடங்களுக்கு முன்பே பல புகார்கள் கிளம்பின. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடந்த 29-12-2005 அன்றே இந்த பள்ளியில் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அரசின் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றும் பல்வேறு புகார்களை முன் வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராட்டம் நடத்தியது. அதில் சக்தி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. 

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட ஒரு பள்ளியில்,  ஒரு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார் என்ற தகவல் வந்ததுமே   மாவட்டக் கல்வித்துறையும், மாவட்ட காவல்துறையும்  விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? உடனடியாக செயலில் இறங்கியிருக்க வேண்டாமா? 

*தனியார் பள்ளி, விடுதிகளில்  மாணவர்களின் பாதுகாப்பு பற்றி முறையான ஆய்வு பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறதா? அப்படியென்றால் இந்த சக்தி பள்ளியிலும் அப்படிப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டதா? 


* ஸ்ரீமதி என்ற மாணவியை  கட்டாயப்படுத்தி விடுதியில் தங்கவைத்ததுபோல் மற்ற மாணவர்களையும் கட்டாயப்படுத்தி விடுதியில் தங்க வைத்தது பற்றி பள்ளிக் கல்வித்துறைக்கு தெரியுமா?  அவ்வப்போது ஆய்வு நடத்தியிருந்தால் தெரிந்திருக்குமே? 

* சம்பவம் நடந்த ஜூலை 13 ஆம் தேதியில்  இருந்து நான்கு நாட்கள் வரையில் போராட்டத்தை நீடிக்க விட்டது ஏன்? மூன்றாம் நாள் போராட்டம்  தீவிரமாக நடைபெற்றது.  நான்காம் நாள் பள்ளி முற்றுகைப் போராட்டம் என்பதெல்லாம் வாட்ஸ் அப் மூலம் பரப்பப்பட்டன. இது  அரசு கவனத்திற்கு தெரியுமா?  அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

* கடந்த காலத்தில் கூடங்குளம் மற்றும் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டங்களில்  காவல் துறைக்கு அனுபவம் இருந்தும், கள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு வெளி மாவட்டத்திலிருந்து வரக்கூடிய கூட்டத்தை தடுக்க, நடவடிக்கை எடுக்காதது ஏன்?

* கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் பள்ளி நோக்கி குவியும்போது கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை அல்லது ரப்பர் தோட்டக்களை போட்டு கலைக்க முயற்சி செய்யாதது ஏன்?

*போராட்டத்தை தடுக்க செல்லும் காவலர்கள் கையில் லட்டி எடுத்து போகவும், எஸ் ஐ இன்ஸ்பெக்டர்கள் பிஸ்டல் எடுத்துபோக அனுமதிக்கப்பட்டதா?  காவல்துறையினர் கலவரக் காரர்களிடம்  அடிவாங்கியபிறகுதான் அவர்களுக்கு லத்தி  கொடுக்கப்பட்டது. அதற்குள் அவர்கள் தாக்கப்பட்டுவிட்டார்கள் என்று தகவல்கள் வருகிறதே?  காலை 9.45 மணிக்கு கலவரம் துவங்கி போலீஸ் மற்றும் அதிகாரிகளை தாக்கிய பிறகு சுமார் இரண்டு மணி நேரம் பிறகு காலதாமதமாக துப்பாக்கி சூடு மற்றும் லத்தி சார்ஜ் செய்ய அனுமதி கொடுத்தது ஏன்? 

*மக்கள் மீது  எடுத்தஎடுப்பில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று முதல்வர் போலீஸாருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.  ஜூலை 17 ஆம் தேதி  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையை ஆப்ரேட் செய்தது டிஜிபி அலுவலகமா, முதல்வர் அலுவலகமா?

* பள்ளி நிர்வாகிகளை  ஜூலை 17 ஆம் தேதி கைது செய்தவர்கள், சம்பவம் நடந்த அன்றே கைது செய்து இந்த கலவரத்தை தவிர்க்காதது ஏன்?

*மாணவி இறந்த 13 ஆம் தேதியே பள்ளி கல்வித்துறை, வருவாய் துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெற்றோர்களையும் பள்ளி நிர்வாகத்தினரையும் அழைத்து கூட்டம் போடாதது ஏன்? 

*விபத்தோ கலவரமோ ஏற்பட்டால் யார் பாதிக்கப்பட்டார்களோ அந்த சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரை அனுப்புவது வழக்கம். இந்த முறை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க தொழிலாளர் நலத்துறை கணேசன் மக்களைச் சந்திக்க அனுப்பப்பட்டார். அவரோடு  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விழுப்புரம் வட்டாரத்தில் நீண்ட நாளாக அரசியல் செய்து வரும் பொன்முடி போன்றோரை உடனடியாக அனுப்பாதது ஏன்?

*மாணவி இறந்த பிறகு  இரு நாட்கள் சில கட்சியினர் தனித்தனியாக சென்று பள்ளி நிர்வாகத்திடம் சென்று பிரச்சினையை முடிக்க பேரம் பேசியிருக்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பான இந்த பேச்சுவார்த்தை பற்றி உளவுத்துறையோ,  கல்வித் துறையோ கண்டுகொள்ளாதது ஏன்?

  *கள்ளக்குறிச்சியில் நடந்து வந்த நிகழ்வுகள் குறித்து  காவல்துறையின் கீழ் மட்டத்தில் இருந்து உரிய தகவல்களும், உரிய எச்சரிக்கைகளும்  உடனக்குடன் காவல்துறை மேலிடத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது என்றும், ஆனால் உரிய உத்தரவுகள் வராததால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுவிட்டன என்றும் போலீஸ் வட்டாரத்திலேயே புலம்பல்கள் கேட்கிறதே? அப்படியென்றால் தமிழ்நாடு போலீஸ் மேலிடம் கிரவுண்ட்  ரிப்போர்ட் அடிப்படையில் செயல்படாமல் வேறு ஏதேனும் உத்தரவுகளின்படி செயல்படுகிறதா?

-மின்னம்பலம் டீம்

+1
0
+1
0
+1
0
+1
10
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published.