கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனுவை நாளை (ஜூலை 18) சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்று வந்தார். கடந்த 13ஆம் தேதி மாணவி விடுதியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னசேலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து நீதி கிடைக்க வேண்டும் என்று நடந்து வந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியது.
இதனிடையே மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது மகளின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தங்கள் தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும். வழக்கை சின்னசேலம் போலீசாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கில் காவல்துறை தரப்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட உடற்கூராய்வின் போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால் முறையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை (ஜூலை 18) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காவல்துறை தரப்பில் உடற்கூராய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தசூழலில் அரசியல் கட்சி தலைவர்களான அண்ணாமலை உள்ளிட்டோர் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பிரியா