எங்களை கலவரம் செய்ய தூண்டியது இதுதான்: சிக்கியவர்கள் வாக்குமூலம்!

Published On:

| By Kavi


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியமூர் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு, நீதி கேட்டு நடந்த போராட்டம் ஜூலை 17அன்று கலவரமாக மாறியது.
கலவரத்தை கட்டுப்படுத்தச் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், ஆயுதப் படை பிரிவு ஐஜி கண்ணன், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மேற்கு மாவட்ட ஐஜி சுதாகர், மத்திய மாவட்ட ஐஜி சந்தோஷ், மற்றும் 4 டிஐஜிகள், 8 எஸ்பிகள், 4 பட்டாலியன் கமோன்டர்கள், டிஎஸ்பிக்கள், உளவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டமே காவல் துறை தலைமையிடம் போல் இருப்பதாக மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்.


கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் எஸ்.பி.மாடசாமி, மற்றும் டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்த அன்று வெளியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து போலீசார் கலவரக்காரர்களை கண்டறிந்து வரும் நிலையில் அதற்கான டைரக்சனை சென்னை சைபர் க்ரைம் கொடுத்து வருகிறது. அதாவது படத்தில் உள்ளவர் யார்? என்ன ஊர்? அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை சைபர் க்ரைம் கொடுக்க எஸ்.பி மாடசாமி தலைமையிலான போலீஸ் டீம் சென்று கலவரக்காரர்களை பிடித்து வருகிறார்கள்.

காவல்துறையினரைத் தாக்கியவர்கள், பேருந்துகளை உடைத்தவர்கள் பள்ளியை சூறையாடியவர்கள் என பலரையும் அடையாளம் கண்டு தனியாக அழைத்துப் போய் போலீஸ் பாணியில் சிறைக்கு அனுப்புகிறார்கள். பிடிபட்டவர்களில் அதிகம் பேர் பட்டியலின, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமிய இளைஞர்களும் இடம் பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிடிபட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதற்கு என்ன காரணம் என்று விசாரணை அதிகாரிகளிடம் விசாரித்தோம். “என் மகளைக் கொன்று விட்டு மறைக்கிறார்கள் என்று டிவி மற்றும் சோசியல் மீடியாக்களில் இறந்துபோன மாணவி ஸ்ரீமதி தாயார் செல்வி கதறி அழுத காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கியது. அதோடு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதற்கு நீதி கேட்டு போராட வேண்டும் என்று வாட்ஸ் அப் குழுக்களிலும் தகவல் வந்தது. ஆதலால் கிடைத்த வண்டிகளில் போராட்டத்துக்கு புறப்பட்டோம். பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் தவறு செய்துவிட்டோம் எனக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். பிடிபட்டவர்களில் மேலும் சிலர், நாங்கள் பள்ளியைத் தான் அடித்தோம், போலீஸை தாக்கவில்லை, வேறு ஒரு குரூப் தான் அடித்தார்கள் என்று அவர்களை அடையாளமும் காட்டினார்கள்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ஸ்பாட்டில் போட்டோ எடுத்தவர்கள், ஷேர் செய்தவர்கள், செல்போன் பயன்படுத்தியவர்கள், வாட்ஸ் அப்பில் தகவலை பரிமாற்றம் செய்தவர்கள் என அனைவரையும் சிறப்பு டீம் கொத்தாக அள்ளிவிட்டது” என்றனர்.

விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிதம்பரம், விருத்தாசலம், சங்கராபுரம், ஆத்தூர், தியாக துருகம், சேலம் போன்ற பகுதிகளிலிருந்தும் வந்துள்ளனர். அவர்களை ஒருவரை விடாமல் சிசிடிவி கேமரா, ஊடகங்களின் வீடியோ, போலீஸ் எடுத்துள்ள வீடியோ, போன் கால், டவர் லொக்கேஷன் என கண்காணித்து சல்லடை போட்டு பிடித்து வருகிறோம். பள்ளி நிர்வாகம் கொடுத்துள்ள புகார் மீது ஸ்ரீமதி தாய் செல்வி, தந்தை ராமலிங்கம் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்.

குற்ற எண் 235/2022 இல் பள்ளி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் சட்டம் படித்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மாணவி குடும்பத்தினர் சார்பாக எனச் சொல்லி சிலர் பள்ளி நிர்வாகத்திடம் ஒரு கோடி நிவாரணம் கேட்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் பத்து லட்சம் கொடுக்க முன் வந்துள்ளது அதையேற்க மறுத்துள்ளார்கள், அதுவும் அம்பலமாகும்” என்றார்.

வணங்காமுடி