கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விபரீதத்தால் இதுவரை 58 பேர் பலியாகிவிட்டனர். ஒட்டுமொத்த நகரமும் இன்னமும் பரபரப்பில் இருந்தும் சோகத்தில் இருந்தும் மீளவில்லை.
கடந்த ஆண்டு மரக்காணம், செங்கல்பட்டில் இதேபோன்ற கள்ளச்சாராய சம்பவம் நடந்து 14 பேர் பலியான நிலையில்… மீண்டும் அதேபோல ஒரு சம்பவம்,.. அதை விட மூன்று மடங்கு அதிகமான உயிர்கள் பறிபோயின என்பதால் இதை எதிர்கட்சிகள் அரசியல் ஆயுதமாகவும் ஏந்தியிருக்கின்றன.
பாஜக தமிழகம் முழுதும் ஆர்பாட்டம் நடத்தியது. நேற்று (ஜூன் 24) காலை மாவட்டங்கள் தோறும் அதிமுக ஆர்பாட்டம் நடத்தியது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். மாலையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் சென்னையில் ஆர்பாட்டம் நடத்தியது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும், அக்கட்சித் தலைவர் அன்புமணியும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு மீதும், திமுகவின் கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.எல்.ஏ.க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் மீதும் கடுமையான புகார்களை தெரிவித்தனர்.
இவர்களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது என்று கூறிய அன்புமணி, ‘மாவட்டச் செயலாளரான வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.தான் இங்கே அறிவிக்கப்படாத அமைச்சராக செயல்படுகிறார். அவர் மீதும் உதயசூரியன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு திமுக சார்பில் சட்டமன்ற வளாகத்திலேயே கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களான வசந்தம் கார்த்திகேயன் உதயசூரியன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் அளித்தனர்.
”எங்கள் மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும் சொல்லும் குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை அவற்றை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலகுகிறோம். நிரூபிக்க முடியவில்லை என்றால் ராமதாசும் அன்புமணியும் அரசியலில் இருந்து விலகுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் இந்த இருவர் சார்பிலும் டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சாராய வியாபாரிகளோடு கள்ளக்குறிச்சி திமுகவினருக்கு தொடர்பு உள்ளது என்று அதிமுக, பாஜக, பாமக ஆகிய எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் புகார் சொல்லுகிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் என்ன நடக்கிறது?
கள்ளக்குறிச்சி திமுகவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் என்ன நடக்கிறது? பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவின் ரோல் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணையில் இறங்கினோம்.
”மற்ற மாவட்ட நிர்வாகங்களோடு ஒப்பிடும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பது ஒரு குழந்தை. எடப்பாடி ஆட்சியில் 2019 நவம்பரில்தான் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டமாக உருவாக்கப்பட்டதுமே முதல் கலெக்டராக கிரண் குராலா. இவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாக ரீதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரிப்பது, எல்லை வரையறை செய்வது அது தொடர்பான கோப்புகள் உருவாக்குவதே முதல் பணியாக இருந்தது. எல்லை மறு சீராய்வுதான் முதன்மையான பணியாக அவருக்கு இருந்தது.
இந்த நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் கலெக்டர் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். ஆட்சிக்கு வந்த புதிதில் கொரொனா தடுப்புப் பணிகள் என ஓடிவிட்டது. 2022 ஜூலையில் மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்த நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் மாற்றப்பட்டார்.
அதன் பிறகுதான் ஷ்ரவன் குமார் கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்த ஷ்ரவன் குமார் அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேந்த ஷ்ரவன் குமார், அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவரது சிபாரிசில்தான் கோவை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார் என்று வேலுமணி வட்டாரத்திலேயே விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல,.. அமித் ஷா மகன் ஜெய்ஷா வரை தொடர்புகொண்டவர் என்று அப்போதே கலெக்டரேட்டில் பேச்சுகள் எழுந்தன.’
ஷ்ரவன் குமார் தனது கலெக்டர் பங்களாவை அழகுபடுத்துவதிலும் மெருகேற்றுவதிலுமே குறியாக இருந்தாரே தவிர மாவட்ட நிர்வாகத்தில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. கலெக்டரேட் பங்களாவில் ஒரு வாஷ் பேசின் குஜராத்தில் இருந்து தருவிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்து அதை மெருகேற்றினார்.
திமுக எம்.எல்.ஏ.க்களையோ, மாவட்டச் செயலாளர்களையோ அவர் மதிப்பதே இல்லை என்று மேலிடத்துக்கு பல முறை அப்போது தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகள் சொல்லும் எதையும் கேட்டதில்லை. கலெக்டர் ஷ்ரவன் குமார் அதே நடவடிக்கையைதான் தொடர்ந்தார். பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு கூட கலெக்டரிடம் சொன்ன சில விஷயங்கள் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அவரும் தனக்கு இருக்கும் துறைப் பணிகள், திருவண்ணாமலை மாவட்டப் பணிகளுக்கு இடையே கள்ளக்குறிச்சி பணிகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இதுதான் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் உருவாக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை அதிகாரிகள் நிலவரம்” என்று முன்னோட்டம் கொடுத்தவர்கள் நடப்பு விவகாரத்துக்கு வந்தனர்.
“ஜுன் 19 ஆம் தேதி காலை கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிலர் வயிற்று வலி கண் பார்வை குறைபாடு என அட்மிட் செய்யப்பட்டனர் என்ற தகவல் அறிந்து, 11 மணியளவில் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். கலெக்டரும் அங்கே சென்றார். மற்ற வருவாய் துறை அதிகாரிகளும் விரைந்தனர்.
1 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய கலெக்டர், ”கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணமா என்று உறுதிப்படுத்த முடியவில்லை” என்றார். ஆனால் அதற்குள்ளாக 30, 35 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். அதன் பிறகுதான் கருணாபுரம் என்ற ஒரே பகுதியில் இருந்து அவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருப்பதும் கள்ளச்சாராயம் அருந்தியிருந்ததும் பரபரப்பான செய்திகளாக வெளியானது.
தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமாரும் மருத்துவமனைக்கு சென்றவர் சில மணி நேரங்களில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பிற்பகல் 3 மணியளவில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், உடனடியாக அன்று மாலையே கலெக்டர் மாற்றப்பட்டார். எஸ்பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
19 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு அங்கே வந்துவிட்டார். அவரோடு மருத்துவ அமைச்சர் மா.சு.வும் கள்ளக்குறிச்சிக்கு வந்துவிட்டார். இரவு 12.45 மணி வரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில்தான் அவர்கள் இருந்தார்கள்.
இந்த இடைவெளியில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் அதாவது அமைச்சர் உதயநிதி துறை செயலாளர் தாரேஸ் அகமதுவும் கள்ளக்குறிச்சி விரைந்தார். விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மருத்துவமனை டீன்களை உடனடியாக அழைத்து கள்ளக்குறிச்சியில் ஒரு ஆய்வுக் கூட்டத்தை இரவே அமைச்சர்கள் வேலுவும் மாசுவும் நடத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்துவது, அட்மிட் ஆக வரும் மற்றவர்களை அருகே உள்ள மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்புவது, சென்னை, புதுச்சேரியில் இருந்து சிறப்பு மருத்துவர்களை வரவழைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் அமைச்சர் எ.வ.வேலு.
இரவு 12.45 வரை இந்த பணிகளை கவனித்துவிட்டு அன்று இரவு சென்னைக்குப் புறப்பட்டார்கள் வேலுவும் மாசுவும்.
மறுநாள் ஜூன் 20 ஆம் தேதி காலை சட்டமன்றம் கூடும் முன்பே… தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் வேலு, உதயநிதி, மாசு உள்ளிட்ட அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டனர், அதில் வேலுவும், மாசுவும் நிலவரத்தை விளக்கினர். இழப்பீடு குறித்து விவாதிக்கபப்ட்டு முடிவெடுக்கப்பட்டது.
உடனே முதலமைச்சர், ‘நான் அங்க வரணும்னுதான் நினைக்கிறேன். உடம்பு சற்று சோர்வா இருக்கு. அலையக் கூடாதுனு மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்க (வேலு) உடனே மறுபடியும் கள்ளக்குறிச்சிக்கு கெளம்புங்க. மாசுவும் உதயநிதியும் கெளம்புங்க’ என்று சொல்லியிருக்கிறார்.
ஜூன் 20ஆம் தேதி காலை மீண்டும் கள்ளக்குறிச்சிக்குப் புறப்பட்டார் அமைச்சர் எ.வ.வேலு, அவரோடு அமைச்சர் உதயநிதியும், மா.சு.வும் புறப்பட்டனர். அப்போதுதான் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்.
இதற்கிடையே தாரேஸ் அகமதுவும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து உடனுக்குடன் உத்தரவுகளை இட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் புது கலெக்டர் பிரசாந்த், புதிய எஸ்.பி. ஆகியோரும் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், தாரேஸ் அகமது ஆகியோரிடம் ஆலோசனைகளை மேற்கொண்டு செயல்படுத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் உதயநிதி வருவதற்குள் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவித்தபடி, நிவாரண செக்குகள் தயாராகின. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க, மருத்துவ மனையில் இருந்து கிடைக்கும் ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் பத்து லட்ச ரூபாய்க்கான காசோலை ஏற்பாடுகளும் நடந்தன.
பிற்பகல் 2 மணி நெருக்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதி, மா.சு. ஆகியோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனை வளாகத்துக்குள் வந்தனர். வேலுவின் காரில்தான் அமைச்சர் உதயநிதி வந்தார்.
அப்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மருத்துவமனை வளாகத்தில் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
‘அவர் சென்றுவிட்டு வரட்டும்…’ என்று சொன்ன உதயநிதி அதுவரை மருத்துவமனையின் அட்மினிஸ்ட்ரேஷன் பிளாக்கில் அமர்ந்து அமைச்சர்கள், மருத்துவர்கள், அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரம் ஆலோசனைக்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின் அரசின் நிவாரண உதவிகளை கருணாபுரம் பகுதிக்கு சென்ற உதயநிதி ஒவ்வொரு வீட்டுக்காக சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்பகுதியில் இருந்த உள்ள அரசுப் பள்ளியில் வைத்து வழங்கலாம் என உதயநிதிக்குத் தெரிவிக்கப்பட அமைச்சர் அங்கே சென்று அவர்களுக்கு அரசின் நிவாரண நிதியை பத்து லட்சம் செக் உடனடியாக வழங்கினார்.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளார் தாரேஸ் அகமது, புதிய கலெக்டர் ஆகியோர் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனிடம் ஆலோசித்து களத்தில் நடக்கவேண்டியவற்றை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் முடித்துவிட்டு உளுந்தூர் பேட்டை டிராவலர்ஸ் பங்களாவுக்கு உதயநிதி செல்லும்போது மாலை மணி 5. அப்போது பொறுப்பு அமைச்சர் எ. வ.வேலுவிடம், ‘தலைவர் ரொம்ப டென்ஷனா இருக்காரு. அரசு அதிகாரிகள், நம்ம கட்சிக்காரங்ககிட்ட மக்கள் எப்படி நடந்துக்குறாங்க? கோபமா இருக்காங்களா? என்ன பண்றாங்கனு’ கேட்டாரு’ என்ற உதயநிதி கேட்டிருக்கிறார்.
அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, ‘ என்கிட்டயும் இதை தலைவர் கேட்டாரு. நேத்து இரவுலேர்ந்து நான் சிகிச்சை பெறும் ஒவ்வொருத்தர்கிட்டையும் பெட் பக்கத்துல நின்னு பேசினேன். அவங்க குடும்பத்தார்கிட்டையும் பேசினேன். தனிப்பட்ட முறையில பேசினேன். வசந்தம் கார்த்திகேயனும், உதயசூரியனும் இறப்பு நடந்த ஒவ்வொரு வீட்டுக்கும் போயிருக்காங்க..
மக்கள் நம்ம மேல எந்த கோபத்தையும் காட்டலை. நாம ஆறுதலா பேசிட்டுதான் வர்றோம். அரசாங்கம் மேலயோ ஆளுங்கட்சியான நம்ம மேலயோ ஏதாச்சும் கோபத்தை மக்கள் காட்டுவாங்கனு நாங்களே எதிர்பார்த்தோம். ஆனா மக்கள் அதுமாரி நடந்துக்கல. இதுதான் நிலவரம்’ என சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகு தாரேஸ் அகமது, புதிய கலெக்டர், புதிய எஸ்பி ஆகியோரிடம் சொல்லிவிட்டு சென்னைக்குப் புறப்பட்டார் உதயநிதி.
கள்ளக்குறிச்சியில் மக்கள் அரசுக்கு எதிராகவோ, ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராகவோ போராட்டம் செய்வார்கள் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி ஒரு அறிகுறி இல்லாததால்தான்… அதிமுக சார்பாக கள்ளக்குறிச்சியில் நடக்கும் ஆர்பாட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியே நேரடியாக சென்று கலந்துகொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அதிமுக நடத்திய ஆர்பாட்டங்களில் பொதுச் செயலாளரான எடப்பாடி கலந்துகொள்ளாமல் ஜெ.பாணியை பின்பற்றி வந்தார். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அங்கே களத்தின் சூடு ஆறிவிடக் கூடாது என்பதால்தான்.., கள்ளக்குறிச்சியில் நடக்கும் ஆர்பாட்டத்துக்கு, தானே சென்றிருக்கிறார் எடப்பாடி.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”சொந்த பிள்ளைகளால் பாரத மாதா முதுகில் குத்தப்பட்ட நாள்” : ஆளுநர் ரவி
ஏடிஎம் இயந்திரத்தையே கயிறு கட்டி இழுத்துச் சென்ற திருடர்கள்!
ஒழுகும் அயோத்தி ராமர் கோயில் கூரை: தலைமை அர்ச்சகர் கவலை!
T20WorldCup : ஆஸ்திரேலியாவை பழிதீர்த்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!