வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்புமனு முதலில் மறுக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 1,403 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (மார்ச் 28) அனைத்து தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
அதன்படி வட சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜின் வேட்புமனு முதலில் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மனுவில் காலாவதியான நோட்டரி கையெழுத்து பெறப்பட்டிருப்பதாகக் கூறி அவரது மனுவை ஏற்கக் கூடாது என்று பாஜக தரப்பில் முறையிடப்பட்டது. இதனால், கலாநிதி வீராசாமியின் வேட்புமனு மீதான பரிசீலனை தள்ளி வைக்கப்பட்டது.
அதே போன்று, வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவில் முந்தைய வழக்குகளின் விவரங்களை தெளிவாக குறிப்பிடவில்லை என சுயேச்சை ஒருவர் புகார் தெரிவித்தார். அதனால், அவரது மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
எனினும் பிற்பகலில் இரு தரப்பில் இருந்தும் விளக்கம் பெறப்பட்ட நிலையில், திமுகவின் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுகவின் ராயபுரம் மனோ ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமைச்சர், மேயருடன் வாக்கு சேகரிப்பு!
வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள கலாநிதி வீராசாமி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கவுதமபுரத்தில் கூட்டணி கட்சிகளுடன் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தாய்மாமன் போட்ட விதை… வைகோ வளர்த்த விருட்சம்! யார் இந்த கணேசமூர்த்தி?
வில்லேஜ் குக்கிங் சேனல் பெரிய தம்பிக்கு என்னாச்சி?