கலாஷேத்ராவின் கீழ் இயங்கும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவிகள் அமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு பயிலும் மாணவிகள் நேற்று (மார்ச் 30) கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இன்று இரண்டாவது நாளாக மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவிகள் போராட்டம் காரணமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ருக்மணி தேவி கல்லூரி மாணவிகள் அமைப்பு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், “கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு 4 பேராசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் அளித்து வருகின்றனர். அவர்களை கல்லூரி இயக்குநர் மற்றும் நடன துறை தலைவர் காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் தோனி விளையாடுவாரா?
இந்தூர் கிணறு விபத்து: தொடரும் சோகம்!