கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பணிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கொடிகம்பத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “கலைஞருக்கு பேனா சிலை அமைப்பதற்கான பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் இரண்டு கட்டமாக தொடங்கப்பட்டது.
ஒன்று தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கலைஞருக்கு நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பது.
மற்றொன்று புலவர்கள் , ஆன்மீகவாதிகள், எல்லாம் முதல்வர் ஸ்டாலினிடம் கடலில் கலைஞருக்கு பேனா சிலை வைக்கலாம் என்று கோரிக்கையின் அடிப்படையிலானது.
அதன்பெயரில் தான் தற்போது எந்தெந்த துறைகளில் மறுப்பில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டுமோ அவை எல்லாம் திட்டமிடப்பட்டு முழுமையாக மறுப்பில்லாச் சான்றிதழ் வாங்கப்பட்டது.
அதை அனுமதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. கோரிக்கை வைக்கும் உரிமை தான் மாநில அரசிடம் உள்ளது. அதே நேரம் கடலில் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்தமாதமே இது தேவையற்ற வழக்கு என்று உச்சநீதிமன்றம் ஒரு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
அதுபோல் நேற்று நடைபெற்ற வழக்கையும் மத்திய அரசு அனுமதியோடு தான் பேனா சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடலில் பேனா வைப்பது இரண்டாம் கட்ட பணிதான்.
அதற்கான திட்ட மதிப்பு இன்னும் தயார் செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றமும் கடலில் பேனா சிலை வைக்க அனுமதி அளித்துவிட்டது.
இதனால் பொதுப்பணித்துறை சார்பில் முதல்வருடன் கலந்து பேசி இது தொடர்பான தகவல் அறிவிக்கப்படும்” என்ற அவர் ”கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பணிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படும்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைப்பு!
காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலினத்தவர்கள் கோவிலில் சாமி தரிசனம்!