ஸ்ரீராம் சர்மா
காலமெல்லாம் தமிழுக்காக ! கண் விழித்தாலது தமிழருக்காக என ஓயாது எழுதிக்கொண்டிருந்தது ஒரு பேனா!
தான் ஆண்ட மண்ணில் தன் கால்படாத இடமில்லை எனும்படிக் கடுகி நடந்து உடல்தளர உழைத்தபோதிலும் – வைகறைக்கு முன் எழுந்து நெஞ்சறியக் காயாது நீள எழுதிக் கொண்டிருந்தது அந்த நெடும் பேனா!
ஐந்து முறை ஆட்சி கண்டு – அன்னைத் தமிழ் மண்ணுக்கான எத்துணையோ நலத் திட்டங்களுக்கு உத்தரவிட்டு உறுதியளித்து கையொப்பம் இட்டுக் களித்தது அந்த ஜனநாயகப் பேனா!
நலம்பாடி நாடிக் கூடியவருமுண்டு. நம்பிய கை ஒடித்து நாயென்றும் பேயென்றும் ஏசியவருமுண்டு. சுயநலமோடிய பாழரசியலில் அது சகஜம். ஆகட்டுமே. எனது வேலை என் தமிழ் சமூகத்தை இளைப்பாற்றுவதுதானே என்றபடி – விரலொடிய விரைந்து எழுதிக்கொண்டேயிருந்தது அந்தக் கொள்கைப் பேனா!
தொய்யாது துவளாது – நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சமென மலர்ந்து நின்று கவியரங்கம் தோறும் ஞானத் தமிழ் இலக்கியமாய் படைத்துக் கொண்டிருந்தது மோனத்திருந்த அந்த முழு பேனா!
தேரோட்டம் காணும் வார்சடையோன் மண்தோன்றி – போராட்டமே வாழ்க்கையாய் போன போதிலும், ‘ போடா போ…’ என பொழுதெல்லாம் தமிழெழுதிக் களைத்தது அந்தப் பெரும் பேனா!
தள்ளாத வயதிலும் ராமானுஜத் தமிழ் எழுதி – நினைவு தப்பும் வரையிலும் எழுத்தையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்து – அடியேனைப் போன்ற எழுத்தாளருக்கெல்லாம் வழிகாட்டி நின்றதந்த திராவிடத் தமிழ் பேனா!
அதை அன்னை என்பேனா! அதிமதுரம் என்பேனா! கன்னல் சுவை கூட்டிய கருவி என்பேனா! மதனம் என்பேனா! மாயக் கோல் என்பேனா! ஏரிக்கரை வீசுமிளந் தென்றல் என்பேனா! ஓ… உறவு என்பேனா? நறவு என்பேனா? உய்யடா உய் என்றுரைத்த குருமுகம் என்பேனா? எப்படி நான் அழைத்தாலும் அதுவாகி நிற்குமொரு அறிவாயுதம் எதுவோ அதுவே அந்தப் பேனா!
அந்தப் பேனாவைத்தான் மரியாதைக்குரிய சின்னமாக வங்கக் கடல் நடுவே வைக்கப் போவதாக தமிழ்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அம்மவோ… அறிவாயுதத்தை பெருங்குறியாக வைத்து தமிழ்ச் சாதியை தலை நிமிரச் செய்யுமந்த அறிவிப்பை நோக்கி எத்துணை காழ்ப்புகள்? ஆங்காரங்கள்?
காழ்ப்புணர்ச்சியின் பாற்பட்ட அதுபோன்ற வசை வல்லாட்டங்களினால் கலைஞர் கருணாநிதி என்பாரின் மேல் சிலருக்கு இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அதிருப்தி கூட துடைத்தெறிந்து விடப்படும் என்பதே உண்மை.
வாலறுந்த பல்லியாய் துடுக்காட்டம் ஆடுமந்த கூட்டத்தையும் – அதன் வாட்ஸ்அப் வாயையும் உலகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். அதற்குள் சென்றால் இந்தக் கட்டுரையின் மேன்மை கெட்டுவிடும் என்பதால் விட்டகன்று தொடர்கிறேன்.
காழ்ப்புணர்வோடு கசட்டு பாஷை பேசுபவர்களுக்கு விடை கொடுத்து அரசமைக்கும் இந்த அருஞ்சிலையை – அரசியல் அகற்றி வழிமொழிய வேணுமாய் அறிவார்ந்த சமூகத்தைப் பணிவார்ந்து வேண்டுகிறேன். கலைஞரின் பேனாவை மட்டுமே காணும் நல்லோர்கள் இந்தக் கட்டுரையின் பால் நின்றமைவார்கள் என உளமாற நம்புகிறேன்.
இன்றைய தலைமுறைக்கு கலைஞர் என்பார் யாரென சற்றே விரித்துரைக்கும் கடமை கருதி தொடர்கின்றேன்

இளையோரே கவனியுங்கள்…
தென்னைசூழ் திருவாரூரில் அவர் பிறந்த காலம் இன்றிருப்பது போலான சுதந்திரக் காலமல்ல. கூனிட்டு இந்திய மண் அடிமைபட்டிருந்த கொடுங்காலம்!
ஜமீன்தாரிகளும் வசதி படைத்தவர்களும் மட்டுமே அரசியலாட முடியுமெனும்படிக்கு சமூக நீதி பாழ்பட்டிருந்த பிழையான நேரம். அந்தக் கொடுமை விடுதலைக்குப் பின்பும் தொடர்ந்தது.
இனத்தை மீட்டெடுக்கும் வேட்கை கொண்ட உன்னத உலகத் தலைவர்கள் பலர் அந்த நாளில் தோன்றினார்கள். மார்ட்டின் லூதர் கிங் – மார்கரெட் தாட்சர் – வாங்கெரி மாத்தாய் – எர்னஸ்டோ சே குவாரா போன்றவர்கள் தங்கள் சொந்த இனத்துக்காக தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.
அப்படியாகத்தான் தன் மாணவப் பருவத்திலேயே அண்ணாவைப் பின்பற்றி சமூக நீதியை முன்வைத்துப் பொங்கி எழுந்தார் கலைஞர். அந்த நாளில் அவரவர் நம்பும் ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போராடினார்கள்.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி!
எனும் குறள் வழி கொண்ட கலைஞர் தனக்கான பேராயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது கொடுஞ்சரத்துக்கும் கூரியதாகிய பேனா!
அரசியல் என்பது செயற்பாட்டுக்களமாகும்! அந்தச் செயற்பாட்டுக் களத்தினூடே தன் பேச்சையும் பேனாவையும் சுழல விட்டு சாதித்துக் காட்டியவர் கலைஞர்!
கவனியுங்கள்!
அண்ணா மறைந்த அந்த நாளில் திமுக என்னும் பாரிய கட்சிக்குத் தலைமை ஏற்ற கலைஞருக்கு அன்று 50 வயது கூட நிறைந்திருக்கவில்லை. அன்றிருந்த மூத்த தலைவர்கள் கலைஞரின் தலைமையை ஏன் ஏற்றுக் கொண்டமைந்தார்கள் என்பதற்கு முழுக் காரணம் காத்திரமான அந்த வால்ட்டி 69 வகை பேனா என்றாலது மிகையாகாது!
ஆர்த்தெழுந்து நின்ற கட்சியை ஓர்முகப்படுத்துவதன்பது ஆயிரமாயிரம் குடும்பங்களை தோளேற்றிச் சுமப்பதுக்கீடானது. அடி முதல் முடி வரை ஒவ்வொருவருக்குமோர் எதிர்பார்ப்பு இருக்கும். கூடவே, எதிரிகள் – துரோகிகளின் குழிபறிப்புகளும் சூழ்ந்திருக்கும். அத்துனைக்கும் பதிலாடி நலம்பாடி வீடு சேர்வதென்பது பெரும்பாடு.
அன்றிருந்த தொண்டர்களை லட்சக்கணக்கில் பெருக்கி – அதனை கோடிகளில் உயர்த்திக்கொண்டு போகும் பெரும் பணியை தன் நோக்கமாகக் கொண்டிருந்த கலைஞர் – அந்த பெரும் பாரத்தினூடே இடைவிடாமல் தன் பேனாவையும் செலுத்திக் கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமானது.
1942 ல் முதல் முரசொலியை வெளியிட்டவர் 1960-ல் அதை நாளிதழாக மாற்றி அன்று முதல் ஏறத்தாழ 57 ஆண்டுகள் தன் சமூகத்தின் விடியலுக்காக ஓயாது எழுதிக்கொண்டே இருந்தார்.
மறவன் என்ற பெயரிலும், கருணாநிதி என்ற பெயரிலும், அதன்பின் மு.க என்றும் பிறகு மு.கருணாநிதி என்ற பெயரிலும் ஏறத்தாழ 4 ஆயிரத்து 51 கடிதங்களை அவரது பேனா தன் உடன்பிறப்பை நோக்கி மட்டுமல்ல; தமிழ்ச் சமூகத்தை நோக்கியும் உள்ளன்போடு எழுதியிருக்கிறது.
ஆயிரம் வார்த்தைகளுக்கும் குறைவான கட்டுரை ஒன்றை நயத்தோடு எழுதி முடிக்கவே நாக்குத் தள்ளிப் போகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது மூவாயிரம் வார்த்தைகளை முழு மூச்சோடு எழுதி முடிப்பதென்பது மனித எத்தனத்துக்கு அப்பாற்பட்டது; அதீதமானது.
சமூகப் பிரக்ஞையோடதனை அநாயாசமாக செய்து முடித்து காவேரிக்குள் நுழைந்து தன் நுனி முனை ஒடித்துக்கொண்டது அந்தப் பெரும் பேனா!
அதற்கொரு நன்றி சொல்வதென்பது நாகரிகத் தேற்றம் அல்லவா?
அந்தப் பேனாவை ஏன் வரவேற்க வேண்டும் என்பதற்கு நுண்ணிய காரணமொன்றும் உண்டு. அது இன்றைய இளைய சமுதாயத்தைக் குறித்தது.
கொஞ்சமின்னும் கூர்ந்து கவனியுங்கள்.
அன்றவரின் அரசியல் எதிரியாக எழுந்தவர் திரையுலக சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆர். எளிய மக்களை மயக்கி வைத்திருந்த அந்தத் திரை ஆளுமைக்குப் பின்னால் ஏராளமான பேனாக்கள் அணிவகுத்து நின்றன. ஒவ்வொன்றும் கூரிய பேனாக்கள்.
தஞ்சை ராமையாதாஸ் – பட்டுக்கோட்டையார் – கண்ணதாசன் – வாலி – புலமைப்பித்தன் போன்ற இன்னபிற எழுத்தாளுமைகளின் பின்புலமனைத்தையும் கொண்டுதான் எம்.ஜி.ஆர் அன்று ஓங்கி நின்றார்.

மொத்தத்தையும் கலைஞரின் ஒற்றைப் பேனாவே ஓயாமல் எதிர்த்தடித்துக் கொண்டிருந்தது. இறுதியில் வென்றது. காரணம், அந்தப் பேனாவுக்குப் பின்னாலிருந்த பெரும் நோக்கம். இடைவிடாது தனக்குத்தானே ஏற்றிக் கொண்ட ஊக்கம்.
அந்த நோக்கத்தையும் ஊக்கத்தையும்தான் வங்கக்கடலில் நிற்கப் போகும் அந்தப் பேனா அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் போகிறது என்பதால் அதை வணங்கி வரவேற்கிறேன்.
இன்றைய இளைஞர்கள் இரண்டு ஆண்டுகள் ஓரிடத்தில் பணி செய்யவே சலித்துக்கொள்வதை காண முடிகிறது. உடனடி பலன் வேண்டி இடத்துக்கு இடம் மாறி தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்கிறார்களே எனும் கவலையும் – அந்த அவசரம் மணமுறிவு நீதிமன்றம் வரையிலும் நீண்டு வருகிறதே என்னும் வேதனையும் எனக்குள்ளது.
அதற்கான காரணம், உயர்ந்ததொரு நோக்கமும், பொறுமையும், செயலூக்கமும் அவர்களிடையே இல்லாமல் போனதால்தான் என்பதையும் உணர முடிகிறது.
பொறுமையுடன் நின்று வென்றாக வேண்டுமெனும் நோக்கத்தை – செயலூக்கத்தை இன்றைய தலைமுறைக்கு ஊட்ட வல்லதாக ஓங்கி நிற்கப் போகிறது என்பதாலேயே அந்தப் பேனாவை போற்றி வரவேற்கிறேன்.
ஆம், எந்தப் பதவி சுகமும் இல்லாது பதிமூன்றாண்டுகள் எதிர்க்கட்சியாகவே இருந்தபோதும் ‘விதியே. விதியே…’ எனப் புலம்பிக் கொண்டிருக்காமல் – அதை எப்படியேனும் மாற்றிக் காட்டுவேன் என ஓயாது சுழன்ற அந்தப் பேனா இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக நிற்குமென்பதாலேயே அதனை விரைந்து வரவேற்கிறேன்.
வசதியற்ற குடும்பத்தில் வந்து பிறந்தேனே, சிறுபான்மை சமூகத்தில் பிறந்து தொலைத்து விட்டேனே எனவெல்லாம் தன்னிரக்கம் கொண்டு தளர்ச்சி அடையாமல் –
ஆக்கத்தோடும் ஊக்கத்தோடும் – நயத்தகு அணுகுமுறையோடும் தளராது உழைக்கும் ஒருவருக்கு என்றேனும் ஒரு நாள் உயர்ந்த வாழ்வு கிட்டிவிடுமென உறைக்கச் சொல்லும் காலக் குறியாக நிற்க வல்லது அந்த நெடும் பேனா என்பதாலேயே அதனை வாழ்த்தி வரவேற்கிறேன் !
முடிவாக,
கலைஞரின் மேல் விமரிசனங்களே இல்லையா என்றால் உண்டுதான். கூடவே, விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதன் ஒருவன் ஆதி காலம் தொட்டு இதுகாறும் இந்த மண்ணில் பிறந்ததே இல்லை எனும் பேருண்மையையும் உணர்ந்து கொண்டாக வேண்டும்.
அந்த மனிதன் இந்த மண்ணுக்கு செய்த நலமென்ன எனக் கண்டு நன்றி பாராட்டி நிற்பதே ஒரு நாகரிக சமுதாயத்துக்கு அழகாகும். வங்கக் கடலோரம் நிற்கப் போவது அறிவாயுதம். அதற்கு எதிராக அப்பாவி ஜனங்களிடம் பொய்யாடி திளைப்பதென்பது அநாகரிகம்.
மனித அவையங்களில் நடுவிரலுக்கும் சிறியது நாவு. சக இனத்தின் தலைவர் ஒருவரை தூற்றிச் சொல்ல அது போதும். வாழ்த்தி சொல்லவோ நன்றி கூடியதொரு அகண்ட மனம் இருந்தாக வேண்டும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருக்க காய் கவர்ந்தற்று
இது ஈராயிரத்துப் பேராசான் ஓதி உரைத்த குறள் நெறி!
அது கடந்து எதுதான் சொல்ல!?
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
Comments are closed.