மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திறந்து வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் விழா நிறைவுரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ”நெஞ்சில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்துள்ள நிலையில் இங்கு நிற்கிறேன். வான்புகழ் வள்ளுவருக்கு தலைநகரில் கோட்டம் கண்ட தலைவருக்கு அவர் பிறந்த திருவாரூரிலேயே கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
தலைவராக பிற்காலத்தில் வந்தவரல்ல கலைஞர். அவர் தலைவராகவே பிறந்தவர்.
மன்னர்கள் கூட தாங்கள் ஆளும் நாட்களில் தான் கோட்டை எழுப்புவார்கள். ஆனால் கலைஞரின் மறைவுக்கு பிறகும் நூலகம், மருத்துவமனை, கோட்டம் எழுப்பப்படுகிறது. இன்னமும் கலைஞர் வாழ்கிறார், தமிழ்நாட்டை ஆள்கிறார் என்பதற்கான அடையாளம் தான் இந்த கலைஞர் கோட்டம்.
தனது திருமணம் நடந்த திருவாரூரிலேயே என் தந்தைக்காக என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே இதை கருதுகிறேன்.
கலைஞர் திருவுருவ சிலை, முத்துவேலர் நூலகம், இரண்டு அரங்குகள், தியேட்டர்கள், செல்பி பாயிண்ட், திருவாரூர் தேர் வடிவில் கட்டிடம் என அனைத்து நவீன வசதிகளும் அடங்கியதாக இந்த கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை முதல் குமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்திற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் கலைஞர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் கலைஞர் போட்டியிட்டிருந்தாலும், அவர் கடைசியாக இருமுறை வென்ற தொகுதி திருவாரூர் தான்.
தேர் எப்போதும் புறப்பட்ட இடத்திலேயே நிலைகொள்ளும் என்ற வகையில் இருந்தது கலைஞரின் பயணம். அதனால் தான் திருவாரூரில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும் அவர், “கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வருவதாக இருந்தது. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வரவில்லை.
எனினும் தான் பேச வேண்டிய உரையை அனுப்பியுள்ளார். திருச்சி சிவா வாசித்த அந்த உரை அருமையாக இருந்தது.
இந்திய அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் கலைஞர். அதனால் அவரது கோட்டத்தை திறந்து வைக்க பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வந்துள்ளார். அவருக்கு நன்றிகள்.
வரும் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
’ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ’ என்று சொன்னவர் கலைஞர்.
அவர் கூறியபடி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்துவரும் பாஜக எனும் காட்டுத்தீயை அணைக்கவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான நடவடிக்கையை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எடுத்துள்ளார். அதில் நானும் பங்கேற்கிறேன்.
இந்திய ஜனநாயகத்தினை காக்க வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். இதனை செய்ய தவறிவிட்டால், 3 ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும்.
மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் கேடு.
பாஜகவிற்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு, அகில இந்திய அளவிலும் எதிரொலிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாக தான் பீகாரில் மாநாடு நடக்கிறது.
அடக்குமுறை ஆதிக்கத்திற்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளாகிய நாம், இந்தியாவின் எதிர்காலத்தினை தீர்மானிக்ககூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆவோம். நாற்பதும் நமது; நாடும் நமதே” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
‘கலைஞர் கோட்டம்’: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
என் கிரிக்கெட் வாழ்க்கையில்…அஸ்வின் குற்றச்சாட்டு!