ராஜன் குறை
தமிழ்நாட்டின் வரலாற்று ஆன்மாவில் கலைஞர் சங்கமித்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. நவீன தமிழகத்தைச் செதுக்கிய சிற்பிகளில் முதன்மையானவர் என்று அவரை எதிர்கால வரலாறு கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. அவருடைய வரலாற்று பங்களிப்பை நமக்கு நினைவுபடுத்தத்தான் சில தினங்களுக்கு முன் அமித் ஷா மீண்டும் இந்தி மொழியை அலுவல் மொழியாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் காலனீய மொழியான ஆங்கிலம் அரசு அலுவல்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காக சமஸ்கிருத, இந்தி, ஆரிய காலனீயத்தை தமிழ்நாடு ஏன் ஏற்க வேண்டுமென்பதே நமது கேள்வி.
ஆரிய பண்பாடும், திராவிட பண்பாடும்
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே இரண்டு முக்கியமான, செழுமையான பண்பாடுகள் இந்திய வரலாற்றைக் கட்டமைத்திருப்பதை இன்று அனைவரும் ஏற்பார்கள். ஒன்று மத்திய ஆசிய புல்வெளிகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்த, சமஸ்கிருத மொழியைப் பேசிய ஆரியர்கள்.
அவர்களுக்கு முன்னமே சிந்து சமவெளியில் நகரங்களை உருவாக்கி வாழ்ந்த திராவிட பண்பாட்டுக் கிளையினர். இவர்களுக்குள் ரத்தக் கலப்பு ஏற்பட்டாலும், மொழியிலும் கலப்பு ஏற்பட்டாலும் சில திட்டவட்டமான பண்பாட்டு வேறுபாடுகளும் நிலவத்தான் செய்தன. குறிப்பாக, ஆரியர்கள் உருவாக்கிய வர்ண தர்ம கோட்பாடு என்பது பார்ப்பன, பூசக வம்சத்தினராலேயே சமஸ்கிருத தர்ம சாத்திரங்கள் மூலம் முன்மொழியப்பட்டு வந்தது. பிற்காலத்திலே இவை தென்னாட்டு சமூகங்களிலும் ஊடுருவினாலும் இவற்றுக்கான மூலாதாரங்கள் எதுவும் திராவிட மொழிகளில் எழுதப்படவில்லை. நாம் ஒன்றை கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். வர்ண கோட்பாடு என்பது மறுபிறவிக் கோட்பாட்டுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு குறிப்பிட்ட வர்ணத்தில் பிறப்பவன் அதன் தர்மங்களைச் சரிவர கடைப்பிடித்தால் அடுத்த பிறவியில் அதைவிட மேம்பட்ட வர்ணத்தில் பிறப்பான். வழுவினால் அதைவிட தாழ்ந்த வர்ணத்தில் பிறப்பான். எனவே வர்ணம் என்பது முற்றிலும் பிறப்பின் அடிப்படையிலானது.
இதற்கு மாறாக தமிழின் தொன்மையான பிரதிகளில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பன போன்ற சமத்துவ நெறிகளே காணப்படுகின்றன. எனவேதான் தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் உள்ள வேறுபாடு அல்லது முரண் என்பது வெறும் மொழி அடையாளம் சார்ந்ததல்ல. இருவேறு பண்பாட்டு அடிப்படைகளைக் கொண்டவை அவை என்பது பெறப்பட்டது. ஆரிய புராண கதைகள், பார்ப்பனர்கள் பயின்ற சமஸ்கிருத புராணங்கள் என்பவையும், தமிழர் வழிபாடுகள், தொன்மங்கள் என்பவையும் பல விதங்களில் வேறுபட்டிருந்தன.
திராவிட தமிழர் தன்னுணர்வு
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அச்சுக்கலை வளர்ச்சியுற்றபோது திராவிட மொழிகளின் வரி வடிவங்கள், இலக்கண விதிகள் தொகுக்கப்பட்டன. எண்ணற்ற தமிழ் சான்றோர்கள் தமிழின் இலக்கிய வளங்களைத் தொகுக்கவும், பயிலவும் பயிற்றுவிக்கவும் செய்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தத் தமிழுணர்வு மிகவும் கூர்மைப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை உள்ளிட்ட பலர் தமிழின் தன்னுணர்வை வளர்த்தெடுத்தனர். அயோத்தி தாசர் ‘தமிழன்’ என்ற ஏடு நடத்தினார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த ஆரிய-பார்ப்பனீய பண்பாட்டு மறுப்பும், திராவிட-தமிழ் தன்னுணர்வும் ஒன்றுபட்டன. அது நவீன அரசியல் களத்தில் திராவிட அரசியலாகப் பரிணமித்தது. பார்ப்பனரல்லாதோர் நலன்களை முன்னிலைப்படுத்திய நீதிக்கட்சி தமிழ்நாட்டில் இரட்டையாட்சி முறையில் ஆட்சியமைத்தது. மேலும் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் கீழ் 1937ஆம் ஆண்டு தேர்தல்கள் நடந்தபோது காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்று சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் ஆட்சியமைத்தது. இந்தியா முழுமைக்குமான தேசிய மொழியை, ஆட்சி மொழியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜாஜி சர்க்கார் இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கியபோது, திராவிட தமிழுணர்வு அரசியல் வீறு கொண்டு எழுந்தது. பெரியார் தலைமையில் அலையலையான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதனிறுதியில் திராவிட நாடு கோரிக்கை வடிவம் பெற்றது.
கலைஞர் உருவாக்கம்
பள்ளி வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அனைவரும் அறிந்த செய்தியாகும். ஜாதி ரீதியான விலக்கங்களையும் சிறுவயதிலேயே சந்தித்த அவர், சமூக நீதியின், சம நீதியின் தேவையை நேரடியாகவே உணர்ந்திருந்தார். அதை அடைவதற்கு திராவிட தமிழ் தன்னுணர்வு தேவை, சுயமரியாதை தேவை என்பதையும் அறிந்திட்டார். அவற்றின் கூர்மையான வெளிப்பாடே மீண்டும் ஆரிய ஆதிக்கத்தை நிலைபெறச் செய்யக்கூடிய இந்தி மொழி திணிப்பினை எதிர்ப்பது என்பதையும் உணர்ந்ததால்தான், இந்தி எதிர்ப்பில் பங்கேற்றார்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை இந்த மூன்று அம்சங்களையும் பிரிக்க முடியாது. ஜாதீய ஏற்றத்தாழ்வை மறுதலிக்கும் சுயமரியாதை, சமூக நீதி, சம நீதிப் பார்வை, அவற்றின் பண்பாட்டு அடித்தளமான திராவிட தமிழ் தன்னுணர்வு, அதன் வெளிப்பாடான இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு ஆகிய மூன்று அம்சங்களே அவை.
கலைஞரின் பங்களிப்பு
எத்தனையோ சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் எல்லோரும் இணைந்துதான் இந்த நவீன திராவிட தமிழ் அரசியல் தன்னுணர்வை உருவாக்கினார்கள். அவற்றை மக்கள் பரப்பில் சுயமரியாதை இயக்கம் மூலமாகப் பரவச் செய்த முன்னத்தி ஏர் பெரியார். அந்த தன்னுணர்வுக்கு அரசியல் கட்சி அமைப்பாக வடிவம் தந்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சாமானிய மக்களின் அரசியல் கட்சியினை கட்டி எழுப்பியவர் அண்ணா. பெரியாருடனும், அண்ணாவுடனும் இணைந்து பணியாற்றிய கலைஞர் அவர்களுக்குப் பின் அரை நூற்றாண்டுக் காலம் தன் ஆட்சித்திறத்தாலும், அரசியல் நுட்பத்தாலும் இந்தியா முழுமைக்குமே சமூக நீதி அரசியல் பாதையைச் சுட்டிக்காட்டியவர் கலைஞர். அவர் ஆட்சியில் தமிழ் கோலோச்சியது. தமிழுணர்வு, தமிழுரிமை ஆகியவற்றை குமரியில் நெடிதுயணர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை போல வானாளவிய நிலைப்படுத்தி நிறுவியவர் கலைஞர் என்றால் மிகையாகாது.
தமிழுரிமை என்பது என்ன?
தமிழுரிமை என்பது தமிழ் மொழியைப் பேசிடும், எழுதிடும் உரிமையல்ல. அதை யாரும் பறித்திட முடியாது. அது தமிழர் தம் பண்பாட்டுக்கேற்ப பிறர் தலையீடு இல்லாமல் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ளப் போதுமான சுயாட்சி உரிமைகளைப் பெறுவதுதான் தமிழுரிமை.
அதன் பொருட்டே மாநில சுயாட்சிக் கோரிக்கையினை வடிவமைத்தார் கலைஞர். எழுபத்தைந்தாண்டுக் கால சுதந்திர இந்திய வரலாற்றில் கலைஞர் அளவு கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த முயன்றவர்கள், முயற்சிகளைச் செய்தவர்கள் என வேறு யாரையும் சுட்டுவது கடினம்.
மீண்டும் அந்தக் கோரிக்கைகள் அரசியல் முக்கியத்துவம் பெறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர் தொடங்கிய பணியை தொடர அவரது வழித்தோன்றல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் புதிய அகில இந்திய அரசியல் கூட்டணியின் அங்கமாக விளங்குகிறார்.
இந்திய அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாதபடி முக்கியமான இரண்டு கருத்தியல்களின் மோதும் களமாக மாறியுள்ளது. ஒரு கருத்தியல் இந்தியாவை ஒற்றை அரசாக, இந்து ராஷ்டிரமாக, ஆரிய சனாதான தர்மத்தை அதன் வழிகாட்டு நெறியாகக் கொள்ள நினைக்கும் பாரதீய ஜனதா கட்சியின் இந்துத்துவ கருத்தியல். அதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒன்றிருப்பதாகக் கூறி பல்வேறு துண்டு, துணுக்குக் கட்சிகளை இணைத்துக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு சிலர் அந்தக் கூட்டணியில் இடம்பெறுவது மாபெரும் வரலாற்று முரண்.
மற்றொரு கருத்தியல் இந்தியாவைப் பல்வேறு மக்கள் தொகுதிகளின் கூட்டாட்சியாகக் காண முன்வரும் இந்தியா கூட்டணி. இந்த கூட்டணியில்தான் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காஷ்மீரின் கட்சிகள், இடது சாரி கட்சிகள், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய அனைத்தும் இணைந்துள்ளன.
எதிர்வரும் ஆண்டில் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. அத்தகைய சூழலில்தான் நாம் கலைஞரின் ஐந்தாவது நினைவு நாளை அனுசரிக்கிறோம். அந்த நாளை தமிழுரிமை நாளாகக் கருதி தமிழுரிமை காக்க உறுதியேற்பதன்றி அவருக்கு செலுத்தக்கூடிய அஞ்சலி வேறென்னவாக இருக்க முடியும்
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
WI vs IND: சொதப்பிய இந்திய அணி: வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!