ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், , யஷ்வந்த்பூர் சூப்பர்பாஸ்ட் மற்றும் சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் நேற்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.
”நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல. எனவே. தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தி, இறந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்துங்கள்” என்று கட்சி தலைமை கேட்டுக் கொண்டது.
தொடர்ந்து விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இயங்கியது. ஒடிசாவுக்கு அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின் மற்றும் சிவசங்கர் தலைமையில் 8 அதிகாரிகள் கொண்ட 2 குழு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக சென்னை எழிலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இன்று காலையில் ஒடிசாவிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சிறப்பு ரயில் மூலம் 137 பயணிகள் தமிழகம் வந்தடைந்தனர்.
இந்நிலையில் ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒடிசா ரயில் விபத்து: தகவல் கிடைக்காத 8 தமிழர்களின் நிலை என்ன?
ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்: அமைச்சர் அஸ்வினி விளக்கம்!