ஸ்ரீராம் சர்மா
மங்காத மதி நுட்பம்! மடங்காத தன்மானம்! அணுவெலாம் தமிழ் மோகம்! நா நயம், விநயம், வேகம்!
கற்றாரைக் காமுறும் கதகதப்பு உள்ளம். சோழத்து மன்னர்போல் நாடாளும் தாகம். கன்ன மூலத்தை ஒரு விரல் தாங்க சற்றே சாய்ந்த அசகாய தோற்றம்! விருப்பு வெறுப்பற்ற அதிகாரத் தேற்றம்!
பகட்டில்லா வெள்ளுடுப்பு. பளீரெனும் வெண்சிரிப்பு. தினவெடுத்த தமிழ் முருக்கு! திகட்டத் திகட்டத் திராவிடச் செருக்கு!
குறளதன் மறு புறப்பாடு! கழகமே குடும்பமெனும் ஏற்பாடு! ‘வாய்யா…’ என அழைக்கும் வாஞ்சையான அரவணைப்பு. சற்றே தடுக்கினாலும் சொடுக்கும் செட்டிக் கண்டிப்பு.
மேற்கண்ட மொத்தத்தையும் ஒன்று கூட்டி வைத்தால் காணுமொரு பெருந்தோற்றம். அந்தப் பெருந்தோற்றத்துக்குத்தான் – பெருந்தகைக்குத்தான் – பேராசானுக்குத்தான் – எம் அய்யனுக்குத்தான் இது நூற்றாண்டு!
ஆம்,
வீழ்ந்து கிடந்த திராவிட மண்ணை மீட்டெடுத்து ஓய்ந்த ஈடிணையற்ற அந்த கரகரத்த காந்தக் குரலுக்கு இது நூற்றாண்டு!
பலகோடித் தமிழர்களை ‘உடன்பிறப்பே…’ என வாஞ்சையுடன் அழைத்துத் தழுவிய தேனினுமினிய திராவிட நாவினுக்கு இது நூற்றாண்டு!
செழுந்தமிழடங்கிய ‘வாளி மன்னன்’ கவிதை எழுதிய ஈடிணையற்ற அந்த தங்கப் பேனாவுக்கு இது நூற்றாண்டு!
பதிமூன்று முறை சட்டமன்றம் கண்டு – ஐந்து முறை ஆட்சி கண்டு தமிழகத்தை தரணி போற்றச் செய்த திராவிடத் திருக் கோமானுக்கு இது நூற்றாண்டு!
இந்திய அரசியலின் தன்மையை உள்வாங்கி, அதில் திராவிட அரசியலின் தன்மை இன்றியமையாதது என ஓயாது நிலை நிறுத்திய அஞ்சுகச் செல்வருக்கு இது நூற்றாண்டு!
இதனை நாடுதோறும் கொண்டு கொண்டாட வேண்டியது நமது ஆகப் பெரும் கடமையாகிறது!
கவனியுங்கள், திராவிட சித்தாந்தம் என்பது கோடானுகோடி தொண்டர்களைக் கொண்டு – சமூக நீதியினைத் தழுவியபடி – இருகரை விளைச்சலாய் பெரும்பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்குமொரு மகாநதி!
வடபுலத்து அரசியல் மாந்தரெல்லாம் இதன் தன்மை எத்தகையதோ என பிரமிக்கும்படியாக ஓடுமிந்த மகாநதியின் தோற்றுவாயோ மிக மிக எளிமையானது.
அகண்டு புரண்டு கரை உதைத்தெழுந்தோடும் தாமிரபரணி ஆற்றின் பொதிகைத் தோற்றுவாய் எத்துணை சன்னமானதோ அத்துணை எளிய வாழ்வைத்தான் அன்றைய தலைவர்கள் கண்டார்கள்.
அவர்களில் மிக மிக முக்கியமான தலைவராக நின்றோளிர்கிறார் நமது முத்தமிழறிஞர் கலைஞர்.
கொளுத்தும் வெயிலில், கொட்டும் மழையில் தன்னை நம்பிய தமிழ் மக்களுக்காக நாடெங்கும் சுற்றிச் சுற்றி அரசியலாடிய பெருந்தலைவர் அவர்.
அக்கினி வெயிலுக்கே உஸ்ஸு உஸ்ஸென்று நாம் ஏசி போட்டுக் கொண்டு இயற்கையை பழித்தபடி படுத்துக் கொள்கிறோம். ஆயின், அன்றந்த நாட்களில் ஒரு ஓப்பன் அம்பாஸிடர் காரில் அன்றிருந்த மேடும் பள்ளமுமான சீரற்ற சாலைகளில் முகமெல்லாம் புழுதி படிய குலுங்கிக் குலுங்கியாடியபடி ஓடியோடி…
பல்லாயிரக்கணக்கான பொதுக் கூட்டங்களிலும் – தொண்டர்களின் கல்யாண காது குத்துக்களிலும் பங்கெடுத்து – அதில் தான் கொண்ட சித்தாந்தத்தைப் பேசிப் பேசி உடல் உஷ்ணமேறினாலும் புன்சிரிப்பைத் தக்க வைத்தபடி…
அடுத்த கூட்டத்துக்கு தேதி கொடுக்க முனைந்த அவரது உளப்பாங்கை அந்த உத்வேகத்தை எழுதியோ, பேசியோ புரியவைத்து விட முடியாது.
அதை ஆட்சி சுகம் காணாத காலங்களிலும் செய்து கொண்டிருந்தார் என்பது தான் கலைஞரது தனிப்பட்ட சிறப்பு – சாதனை!
தான் பிறந்த மண்ணுக்காக தமிழுக்காக எழுபத்தைந்தாண்டுக் காலத்தை – வாழ்நாளின் எண்பது சதவிகிதமானத்தை மனதார அர்ப்பணிக்கத் துணிந்த அப்பழுக்கற்ற அவரது அரசியல் உழைப்பானது ஆச்சரியமானது. அசாதாரமானது. தன் தள்ளாத வயதிலும் தள்ளுவண்டி கொண்டும் பத்திரிகையாளர்களை மதித்து சந்தித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
எண்ணிப் பார்க்கையில், அஞ்சுகத்தம்மையாரின் கருவுக்குள் இருந்தபோதே அவரை இந்த சமூகத்துக்கென நேர்ந்து விட்டார்களோ என்பது போலத்தான் அமைந்திருக்கிறது நெகிழ்ச்சிக்குரிய அவரது நீண்ட வாழ்வு!
மதியூக மனிதர்களால் சந்திக்க முடியாத சிக்கலான தருணங்களைக் கூட மிகச் சர்வ சாதாரணமாக கையாண்டு கடந்துகொண்டே இருந்த அவரது நெடிய வாழ்வு பெரும் புதிராகவே தோன்றுகிறது.
ஆம், நீண்டகன்ற அவரது பெரும் வாழ்வை கூர்ந்து கவனிக்கும் எனக்கு அவர் ஒரு சித்தராகவே தோன்றுகிறார்.
சித்தரென்றால் உடனே விபூதி பூசிய, பூணூல் இட்டதொரு தோற்றத்தைக் கொண்டுவிட வேண்டியதில்லை. அதனை எல்லாம் மறுத்து ஏறிய மோன நிலையல்லவா சித்து நிலை!?
தான் யார் என்பதைக் குறித்தும், தான் சென்றடைய வேண்டிய திக்கினைக் குறித்தும், பரிபூரணமானதொரு முடிவுக்கு வந்தபின் – வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் ‘மளுக்கென’ நிலை கடந்தேறுவதே சித்து நிலை என்கிறது யஜூர் வேதத்து நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்ததொரு சூத்திரம்.
குடும்பம் இருக்கும். உறவுகள் இருக்கும். அதன் மீதெல்லாம் அக்கறை இருந்தாலும் எதனோடும் ஒட்டாமல் தன் அறிவு செலுத்தும் திக்கில் திகுதிகுவென முனைப்போடு சென்று கொண்டே இருப்பதுதான் சித்துநிலை எனில் கலைஞரும் ஒரு சித்தர்தான்.
கலைஞர் கடவுளை வெறுத்தார் என்பார்கள் சிலர். உண்மையில், அவர் கடவுள் தன்மையைக் குறித்துக் கேள்வி கேட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படிக் கேட்பதற்கு CONVICTION எனப்படும் உள்ளார்ந்த உறுதி ஒன்று வேண்டும். அது அவரிடத்தில் இருந்தது. அதனால்தான் அவரை சித்தர் எனக் கொள்ள முடியும் என்கிறேன்.
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? நட்டகல்லும் பேசுமோ? எனப் பாடிய சிவவாக்கியர் ஆத்திகர் எனில் கலைஞர் யார்? எண்ணிப் பார்க்க வேண்டும்.
கோயில் கூடாது என நான் சொல்லவில்லை. கோயில், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன் எனும் பிரபலமான திரை வசனத்தின் வழியே தனது உளப்பாங்கை வெளியிட்ட கலைஞர் நாத்திகர் எனில் நாடு நலம்பட வேண்டும் என விரும்பும் நல்லோரெல்லாம் நாத்திகரே!
கவனியுங்கள்.
இதுதான் சரி என எல்லோரும் நம்பும் ஒன்றை வரம்பு மீறாமல் கடந்து போவது சித்தர்களுக்கேயான தனித்த இயல்பாகும். கலைஞரின் கவிதைகளில் அதனைக் காண முடிகிறது.
13.4.1968 ஆண்டு சென்னை வானொலியில் நடைபெற்ற கவியரங்கம் ஒன்றில் கலைஞர் பாடுகிறார்…
அடக்கத்தால் சொல்லுவதாய் எண்ணாதீர்
தளை சீர் தொடை அணி யாப்பெல்லாம்
தடுக்கத்தான் செய்யுமய்யா என் பாட்டில்
அதற்கு விதி விலக்கு
கொடுக்கத்தான் வேண்டும் நீங்கள்
இல்லையென்றால் உமை விடுத்து
நடக்கத்தான் வேண்டுமென்று எழுந்திடுவேன்.
12.9.1969 ஆண்டு சென்னை வாணி மகாலில் நடைபெற்ற பாரதி விழாக் கவியரங்கில் தலைமை ஏற்ற கலைஞர் – ’பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்னும் தலைப்பில் கவிதை பாடிய இரா.இராசலக்குமி என்பாரை அறிமுகப்படுத்தி இவ்வாறு பாடுகிறார்…
சேலாடும் விழிகள் மேல் செயற்கைப் புருவம்
சிவப்பாக இதழ்களிலே வண்ணப்பூச்சு
காலாடை, அரையாடை அணிவதிலே கடும்போட்டி
கல்ரதங்கள் ; அஜந்தாக்கள் அத்தனையும் தலையில் ஏற்றிக்
கண்காட்சிப் பொருளாகக் நடக்கின்றாளே
அவளல்ல புதுமைப் பெண் ; பின்
யார் என்று கேட்கின்றீரோ?
அறிவிக்க அம்மையார் இருக்கின்றார்கள்.
மேற்கண்ட இரு கவிதைகளையும் கூர்ந்து கவனித்தால் அவருக்கு எதுகை எது? மோனை எது? என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதையும் கொஞ்சம் சீர்படுத்தி விட்டால் அது யாப்புக்குள் அடங்கிவிடும் என்பதையும் உணர்ந்து விட முடிகிறது.
உன்னித்தால், யாப்பு என்பது தாளத்தின் நீட்சியே அன்றி வேறில்லை. தாள ஞானத்தை பிறவியிலேயே கொண்டவரான கலைஞரால் அவரது வரிகளை மிக எளிதாக யாப்புக்குள் அடக்கிவிட முடிந்திருக்கும்.
ஆயினும் அவர் அதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. மரபுக் கவிதையின் சூட்சுமத்தை நன்கு அறிந்த கலைஞர் அதனை மீற விரும்பினார் என்றே கொள்ள முடிகிறது.
இலக்கியத்துக்காக இலக்கணமா? இலக்கணத்துக்காக இலக்கியமா? எனும் கேள்விக்கான பதிலாகவே அவரது கவிதைகள் தொனிக்கிறது.
ஆம், சரளமாக வந்து விழும் கவிதைகளில் – தன்னியல்பாக இலக்கியம் நிகழ்ந்து விடுமொரு நிலையில் – இலக்கணத்துக்கான கேள்வி அங்கே தேவையற்றது என்பதே துணிபு!
இப்படித்தான் இதுபோல்தான் என்னும் வழக்கத்தை ஒழித்து புதிதாக சிந்தியுங்கள். அதில் மரபை போர்த்தியபடி வரம்பு மீறாமல் செயலாற்றுங்கள் என்பதை ஒரு சித்தரால் மட்டும்தானே வலியுறுத்திச் சொல்ல முடியும்? அதைத்தான் கலைஞர் செய்து காட்டினார்!
கலைஞரை அன்று தூற்றியவர்களெல்லாம் இன்று அவரைப் போல் உண்டா எனக் கொண்டேற்றுகின்றார்கள். அதுசரி, சமகால சித்தனை என்றுமே வாழ்த்தியதில்லை என்னும் பெருமைதான் இந்த உலகுக்குண்டே!
படிப்பறிவும் பட்டறிவுமாய் கனிந்து முற்றிய ஞானம் படைத்த கலைஞரோ தனது வாழ்நாளில் எந்த விமரிசனங்களுக்காகவும் தன்னை இழந்ததில்லை.
போற்றினாலும் தூற்றினாலும் புறப்பட்டுவிட்ட அம்பு நிற்கப் போவதில்லை – வாழ்த்தினாலும் வசையாடினாலும் கொண்டவழி மாறப் போவதில்லை எனும்படியாக – நிலை குத்தும் வரையில் தமிழுக்காக தன்னைக் கரைத்துக்கொண்டேயிருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
எழுதிக்கொண்டே போகலாம் நிகரிலாக் கலைஞரின் நெடும் வாழ்வை!
கோலாகலமாக இன்று நூற்றாண்டு காணுமெங்கள் திராவிடப் பேராசானை – வங்கக் கடலோரம் சந்தனப் பேழையதனுள் கருப்புக் கண்ணாடியோடு கிடந்துறங்கும் திருவாரூர்த் திருக்கொழுந்தை – கோடிக்கணக்கான திராவிட உடன்பிறப்புகளுக்கு நல்வழி காட்டி நின்ற நாயகனை – ஓவியப் பெருந்தகையாம் என் தகப்பனின் உள்ளம் கவர்ந்த ஈடிணையற்ற எம் முத்தமிழறிஞரை – நெஞ்சம் குழைய நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்குகிறேன்.
எனதெளிய தமிழ்கண்டு மெல்லென கன்னத்தில் அறைந்து வாழ்த்த அவரில்லையே எனும் ஆதங்க அங்கலாய்ப்புடன் முடிக்கிறேன்.
ஐய,
நின் உடல் மறையலாம்! நின் குரல் மறையலாம்!
நின் காட்சி மறையலாம்! நின் மாட்சி மறையலாகுமா!
உதயமெழும் வரையது தொட்டுத் தொடரும்!
ஐய, ஐய…
இன்னுமோர் நூற்றாண்டு இரும்!
குறிப்பு : ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட கலைஞரின் கவிதைகள் அடங்கிய அந்தப் புத்தகத்தினை எங்கெங்கோ தேடியலைந்தேன். முடிவில், அறிவாலயக் கருவூலத்தின் உதவி நூலகரான திரு.பத்மநாபன் அவர்களைச் சென்று சந்தித்தேன். அவருக்கு என்னால் கொடுக்க முடிந்த ஒரே ‘க்ளூ’ என் இளமைக் காலத்தில் படித்த அந்தப் புத்தகத்தில் கலைஞரின் ‘வாளி மன்னன்’ என்னும் தலைப்பிட்ட கவிதை இருந்தது என்பது மட்டும்தான். சொல்லி வைத்தாற்போல் சென்று சற்றே செல்லரித்த அந்தப் புத்தகத்தினை சட்டென எடுத்துக் கொடுத்தார். அண்ணாருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!
கட்டுரையாளர் குறிப்பு:
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
சென்னை ஏரிகளில் 58 சதவிகித நீர்… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!