கலைஞர் நூற்றாண்டு நூலகம்! தி.மு.க என்ற அறிவியக்கத்தின் அடையாளம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை இதைவிட சிறப்பாக தொடங்க முடியுமா என்று அனைவரும் வியக்குமளவு மதுரையில் சிந்தையைக் கவரும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்! இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க என்பது ஓர் அறிவியக்கம் என்று கூறியுள்ளார். அந்த வரலாறு அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும். காரணம், தி.மு.க மீது காழ்ப்புக் கொண்ட மேட்டுக்குடியினர் ஒரு போதும் அதை புரிந்துகொள்ளப் போவதில்லை, புகழவும் போவதில்லை!

பாமர மக்கள் பலர் மனதில் படித்தவர்கள் என்றாலே ஒரு பிம்பம் உள்ளது. ஆங்கிலம் படித்தவர்கள்! ஆங்கிலத்தைப் பேச்சிலும், எழுத்திலும் கலந்து பேசுபவர்கள்! தமிழே தெரியாவிட்டாலும் பரவாயில்லை, ஆங்கிலம் தெரிந்திருந்தால் அவர் அறிஞர்தான் என்று எண்ணுமளவு ஒரு மயக்கம்! அந்த ஆங்கில மோகத்திற்கு முன்னால் மற்றொரு மயக்கம் இருந்தது! அது என்னவென்றால் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் அறிஞர்கள் என்ற எண்ணம்! மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையே இருந்தது! சமஸ்கிருதமும், ஆங்கிலமும் அறிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் சமூகம் எது என்பதை நான் கூற வேண்டியதில்லை.

இம்மாதிரியான மனப்போக்குகள் மிகுந்திருந்த காலத்திலேதான், தமிழில் அரிய கருத்துகளை எழுதவும், அறிவுப் புலங்களை விவாதிக்கவும், அதை அனைத்து எளிய மக்களிடம் எடுத்துச் செல்லவும் ஓர் இயக்கம் முன்வந்தது. அதன் அரசியல் என்பதே படிப்பகங்கள்தான்! ஏடுகள்தான்! மாநாடுகள்தான்! சொற்பொழிவுகள்தான்! மக்களிடம் செய்திகளை எழுத்தாகவும், பேச்சாகவும், புனைவாகவும், இலக்கியமாகவும் எடுத்துச் சென்ற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

தி.மு.க பேசிய மொழிப்பற்று என்பது மொழியை வைத்துக்கொண்டு மூடக்கதைகள் பேசிடுவதற்கு அல்ல! அதில் முற்போக்கு சிந்தனைகளைப் பேசி மக்களிடையே கொண்டு செல்லத்தான்! தமிழின் இலக்கியங்களென திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும், காப்பியங்களையும் எடுத்துச் சொன்னது பழம்பெருமை பேசிடவல்ல! நமக்கென்று அமைந்திருந்த அறிவுப் பாரம்பரியத்தை அனைவரும் உணர்ந்திட! அந்தப் பணியில் அயராது உழைத்த கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாட ஓர் அரும்பெரும் நூலகம் அமைப்பதைவிட சிறந்த ஒரு வழி வேறென்ன இருக்க முடியும்!

மானுட வரலாற்றின் அரும்பெரும் புரட்சி – அச்சுக்கலை!

மானுட சமூகங்களில் கல்வி என்பது பரவலாகப் பெரும் தடையாக இருந்தது, நூல்களைப் பிரதி எடுக்கும் முறை. பெரும்பாலும் கல்வி என்பது வாய்மொழிக் கல்வியாகவும், நூல்களை மனனம் செய்வதாகவும் இருந்தது. இதற்கடுத்து ஓலைச் சுவடிகளிலோ, தாமிரம் போன்ற உலோகப் பட்டைகளிலோ, துணியிலோ எழுத்தைப் பதிப்பது என்ற நடைமுறை இருந்தது. தமிழகத்தில் பெரும்பாலும் ஓலைச் சுவடிகளும் எழுத்தாணிகளுமே பயன்பட்டதாகத் தெரிகிறது. இந்த முறையில் நூல்களை எழுதுவதும், பிரதி எடுப்பதும் மிகுந்த முயற்சியை வேண்டுவதாகும்.

ஐரோப்பாவிலே 1434-36 ஆகிய வருடங்களில், ஜெர்மனி நாட்டிலே, கூடன்பர்க் என்ற ஒருவர், தொடக்கக் கால அச்சு இயந்திரத்தை உருவாக்கினார். இதில் உலோகத்தாலான புடைப்பு எழுத்துகளை ஒரு பலகையில் கோர்த்து, மையில் முக்கி, அதனை ஒரு தாளில் பதிக்கும்போது தாளில் எழுத்துகள் பதிவாயின. அவ்வாறு தோன்றிய அச்சுக்கலை துரிதமாக வளர்ந்தது. அதன் மூலம் நூல்கள் பரவலானதால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் என்பது வேகம் பெற்றது. பல்வேறு சிந்தனைகள் எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு, பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிப்பது என்பது சாத்தியமாயிற்று.

கிறிஸ்துவ பாதிரியார்கள் 1577ஆம் ஆண்டு வாக்கில் தமிழில் கிறிஸ்துவ நூல்களை அச்சிட முனைந்தார்கள். பார்த்தலோமியோ சீகென்பால்கு (1682-1719) போன்றவர்கள் இதில் முக்கிய பங்காற்றினர். அச்சுக்கலை என்பது அவ்விதம் அறியப்பட்டாலும், அச்சிட்ட நூல்களை மக்கள் படிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிய வேண்டுமே? தமிழ் மொழியும், அதன் வரி வடிவமும் தொன்மையானவை என்றாலும், அவற்றை பண்டைய கல்வெட்டுகளிலும், பானையோடுகளிலும் காண முடிந்தாலும், மக்கள் பரவலாக எழுத்தறிந்தவர்களாக இருக்கவில்லை.

எழுத்தறிவு என்பது கல்வி அமைப்புகள் மூலம் கணிசமாகப் பரவி நிலைபெற்ற போதுதான் அச்சுக்கலை என்பதற்கு பயன் அதிகரித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நூல்கள் அச்சிடப்படுவது என்ற நடைமுறை பரவலாகியது. நூல்களை அச்சிட்டு விற்பது என்பதும் நடைபெறத் தொடங்கியது.

நாடு சுதந்திரம் பெற்றபோது…

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதை அனைவரும் அறிவோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டு 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பு அவையால் ஒப்புக்கொள்ளப்பட்டவுடன், இந்தியா அதன் அடிப்படையில் குடியரசாக மலர்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1949ஆம் ஆண்டு பிறந்தது.

அந்தக் காலத்தில் மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றிருந்தவர் எண்ணிக்கை என்னவென்று தெரியுமா? சற்றேறக்குறைய பதினைந்து சதவிகிதம் பேரே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய பஞ்சங்களும், முதல், இரண்டாம் உலகப் போர்களும் மக்களை கணிசமாக வறிய நிலையில்தான் வைத்திருந்தன. குறிப்பாக, கிராமப்புறங்களில் கல்லாமையும், அறியாமையும் கணிசமாக இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் தோன்றிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் உலக அறிவினை, புதிய மக்களாட்சி சிந்தனைகளை, தமிழின் பாரம்பரிய விழுமியங்களை, அதன் பண்பாட்டு பெருமைகளை அனைத்து மக்களிடையேயும் கொண்டு சேர்க்க வேண்டிய சவாலை எதிர்கொண்டது. அதன் தலைவர்கள் பல்வேறு அச்சிதழ்களை துவங்கி நடத்தினார்கள். கட்சிக் கிளைகள் தோன்றிய இடங்களில் படிப்பகங்கள் தோன்றின. கிளைகள் இல்லாத இடங்களில் முடிதிருத்தும் நிலையங்களிலும், சலவை நிலையங்களிலும், தேநீர் கடைகளிலும் செய்தித் தாள்களும், கட்சி ஏடுகளும் இடம்பெற்றன. படிக்கத் தெரிந்தவர் அதிலுள்ள தலைவர்களின் கட்டுரைகளை உரக்கப் படிப்பதும், பலர் அதனை கேட்டு அறிந்துகொள்வதும் நடைமுறையாக இருந்தது.  

திருக்குறள் மன்றங்கள் கட்சிக் கிளைகளின் துணை அமைப்புகளாகத் தொடங்கப் பெற்றன. அதில் திருக்குறளைப் பயில்வது, பேச்சுக்கலையில் பயிற்சி பெறுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Kalaingar Centenary Library importance
கல்விப் பரவலும், அறிவுப் பரவலும்…

இன்னொன்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி நிலவியபோதே 1920ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்தது. இதன்படி இந்தியர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடையே ஆட்சிப் பொறுப்பில் ஒரு பகுதி ஒப்படைக்கப் பட்டது. மதறாஸ் ராஜதானியில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. அதன் பின்னர் 1937ஆம் ஆண்டு கூடுதலான சுயாட்சி உரிமைகளுடன் இந்தியர்களின் ஆட்சி பங்கேற்பு உருவானது. அப்போதுதான் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது.

இவ்வாறு இந்தியர்கள் அதிகாரப் பகிர்வினை மேற்கொண்டபோதே கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கல்வி முறைப்படுத்தப்படுவதும் அதிகரித்தது. நீதிக்கட்சி ஆட்சி சென்னை மாநகரில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை அறிமுகப்படுத்தியது.

இவ்வாறு கல்வி பரவும்போது, அது வெறும் ஏட்டுக் கல்வியாக இருக்காமல் மக்கள் பகுத்தறிவுடன் தன்னுணர்வு பெறவும் அது பயன்பட வேண்டியிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு சிறப்பம்சம், பள்ளி ஆசிரியர்கள், குறிப்பாக தமிழாசிரியர்கள், கட்சி முன்னெடுத்த அறிவுப்பரவலில் தாமாகவே முன்வந்து பங்கேற்றார்கள் என்பதுதான்.

தி.மு.க-வின் அறிவியக்கம் எப்படிப்பட்டது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் பல பகுதிகளில் காலனீய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, சுயாட்சியையும், மக்களாட்சியையும் மேற்கொள்ளத் தொடங்கின. தி.மு.க உலகளாவிய அந்த வரலாற்றுச் செயல்பாட்டின் அங்கமாகவே தன்னையும் கண்டது.

அதனால்தான் மொரோக்கோவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டால், வியட்நாமில் புரட்சி நடந்தால் அதைக் குறித்தெல்லாம் தங்கள் ஏடுகளில் தி.மு.க தலைவர்கள் எழுதினார்கள். தால்ஸ்தாய், கார்க்கி எனப் பல எழுத்தாளர்களை, வால்டேர், ரூஸோ போன்ற சிந்தனையாளர்களை, ஆபிரஹாம் லிங்கன், சன்யாட்சென் போன்ற சீர்திருத்தவாதிகளைக் குறித்தெல்லாம் பேசவும், எழுதவும் செய்தார்கள்.

Kalaingar Centenary Library importance

நாடகமான வரலாறு  

வங்காள சரித்திர ஆசிரியர் ஜாதுநாத் சர்க்கார் எழுதிய மராத்திய வரலாற்று நூலின் மூலம் மாவீரரான சிவாஜி அரியணை ஏற அவரது ஜாதி தடையாக இருந்ததையும், காக பட்டர் என்ற காசியிலிருந்த பார்ப்பன பண்டிதருக்கு கணிசமான காணிக்கைகள் தந்து அவரால் சத்திரியர் என அங்கீகரிக்கப்பட்ட பின்பே சிவாஜி அரியணை ஏற முடிந்தது என்பதையும் அறிந்தார் அண்ணா.

சிவாஜி அமைத்த சாம்ராஜ்யத்தை இந்து சாம்ராஜ்யம் என்று பார்ப்பனர்கள் கொண்டாடுவதையும், அதே இந்து மதத்தின் பேரால் சிவாஜிக்கு தான் போரில் வென்ற பகுதிகளை சத்ரபதியாக ஆள்வதற்கு உரிமை இல்லை என்று பார்ப்பனர்களே கூறியதையும் இணைத்துப் பார்த்த அண்ணா, இந்த வரலாற்று செய்தியை ஒரு நாடகமாக்கித் தந்தால்தான் மக்களால் எளிதில் உள்வாங்கப்படும் என நினைத்தார். எனவே, “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்ற நாடகத்தை எழுதினார்.

சாக்ரடீஸை கிரேக்கத்துப் பெரியாராக்கிய கலைஞர்

மேற்கத்திய தத்துவ வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் கிரேக்கத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த சாக்ரடீஸ். அங்குள்ள அரசியல் சூழலில் அவர் கருத்துகள் ஆள்வோருக்குப் பிடிக்காமல் போக அவர் நஞ்சருந்தி தன்னை மாய்த்துக்கொள்ள தண்டனை விதிக்கப்பட்டார்.

அது குறித்து ஓர் உணர்ச்சி ததும்பும் ஓரங்க நாடகத்தை எழுதினார் கலைஞர். அதிலே சாக்ரடீஸை கிரேக்கப் பெரியார் என விளித்து, தமிழர் தலைவர் பெரியாரின் பகுத்தறிவு விழிப்புணர்வுப் பணியை சாக்ரடீஸின் அறிவியக்கப் பணியுடன் இணைத்துக் காட்டினார் கலைஞர்.

இவ்வாறாக மக்களைச் சிந்திக்க வைக்கவும், கல்வியை நோக்கித் தூண்டவும் உலக வரலாற்றையும், தமிழக வரலாற்றையும் அறிந்து தன்னுணர்வு பெறவும் அயராது உழைத்த ஒரு கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

மேட்டுக்குடியினர், பார்ப்பனர் பார்வை

இன்றுவரை கற்றறிந்த மேட்டுக்குடியினரால் தி.மு.க சாமானிய மக்களிடையே அறிவியக்கப் பணியை மேற்கொண்டதையோ, சமூக மாற்றத்துக்கு வித்திட்டதையோ ஏற்க முடியவில்லை. அது அடுக்குமொழி பேசிய கட்சி, மக்களைக் கவர்ச்சியான பேச்சால் மயக்கிய கட்சி, நாடகங்கள் போட்டதால், திரைப்படங்களில் பங்கேற்றதால் கூத்தாடிகள் கட்சி என்றெல்லாம் இழித்தும், பழித்தும் பேசியே பழகிவிட்டார்கள்.

தி.மு.க-வை எதிர்ப்பதற்கென்றே சோ ராமசாமியால் தொடங்கப்பட்ட துக்ளக் பத்திரிகை அறிவாளிகள் படிக்கும் பத்திரிகை என்று ஒரு பிரபலம் சில ஆண்டுகள் முன்பு கூறியதை அறிவீர்கள். அறிவு என்றால் ஆங்கிலம், சமஸ்கிருதம் என்ற மாயையின் தொடர்ச்சிதான் இது என்பதில் ஐயமில்லை. இப்படி நினைப்பவர்கள் யாரும், திராவிட இயக்க ஏடுகளைப் படித்தும் பார்த்திருப்பார்களா என்பது ஐயமே.

அதனால்தான் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்று பிரம்மாண்டமான உலகத் தரமான நூலகங்களை தி.மு.க உருவாக்குவதைக் காணும்போது அவர்களுக்கு அதனை எப்படி எதிர்கொள்வதென்று புரிவதில்லை.

ஐம்பதுகளில் கட்சிக் கிளைகள் இயங்கிய சிறிய அறைகளில் படிப்பகம் தொடங்கிய இயக்கம்தான், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும்போது பிரம்மாண்டமான நவீன நூலகங்களை உருவாக்குகிறது. அன்றைக்கு விதைத்த விதைதான் இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது.  

இன்றைக்காவது இந்த உண்மையை, தி.மு.க என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அதன் அரசியல் என்பதே பகுத்தறிவை, தமிழின் செவ்விலக்கிய மரபை, உலகளாவிய மக்களாட்சி, சமூக நீதி விழிப்புணர்வை அனைவரிடமும் எடுத்துச் செல்வதுதான் என்பதைப் புரிந்துகொள்வார்களா என்று தெரியாது. ஆனால், சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் அந்த வரலாற்றின் சாட்சியங்களாக வருங்கால சந்ததியருக்கு வழி காட்டி நிற்கும்.  

கட்டுரையாளர் குறிப்பு:

 

 கட்டுரையாளர் குறிப்பு:

Kalaingar Centenary Library importance Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!

சத்யதேவ் லா அகாடமியை துவங்கி வைத்த ஸ்டாலின்

+1
1
+1
1
+1
0
+1
8
+1
1
+1
1
+1
0

2 thoughts on “கலைஞர் நூற்றாண்டு நூலகம்! தி.மு.க என்ற அறிவியக்கத்தின் அடையாளம்!

  1. பாமரம்,சமஸ்கிருதம்,இந்தி,ஏழை,திராவிடம்….. விஞ்ஞான ஊழல்….எத்தனை வருசம் தான் பிறாமணனை வச்சி கட்சி நடத்த முடியும்..
    30,0000 கோடி இரண்டே வருசம்…
    சூப்பர் மாடல்…அடிச்சி தூள் கிளப்புங்க…🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *