சத்தியவாணி முத்து, அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்றும் திமுகவின் பெண்சிங்கமாக வாழ்ந்தவர் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் திமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா இன்று (பிப்ரவரி 19 ) நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் “திமுகவின் பெண்சிங்கமாக வாழ்ந்தவர் சத்தியவாணி முத்து. அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்” என்று கூறினார்.
1991 ஆம் ஆண்டு அகில இந்திய எஸ்.சி.எஸ்.டி ஆணையத்தின் தலைவராக சத்தியவாணி நியமிக்க வேண்டும் என்ற கலைஞரின் கோரிக்கையை பிரதமர் விபி சிங் ஏற்றுக்கொண்டார். ஆனால் அப்போது அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால், சத்தியவாணி முத்து அந்த பொறுப்புக்கு அப்போது செல்ல முடியாமல் போய்விட்டது.அதை மனதில் வைத்திருந்த கலைஞர் 1991- ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை சத்தியவாணி முத்துவிற்கு வழங்கி பெருமைப்படுத்தினார்.
அப்போதுதான் முதன் முதலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தார். முப்பெரும் விழாவைக்கூட சென்னையில் நடத்த விடக்கூடாது என்று கலவரத்தை ஏற்படுத்தினார்கள்.
மிகப்பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லெறிந்து ஊர்வலத்தை கலைக்க பார்த்தார்கள். அப்பொழுதும் தைரியமாக துணிந்து வந்தார். மூன்று நான்கு தெருக்கள் கடந்து எப்படியோ மேடைக்கு வந்துவிட்டார்.
தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் குறித்து எழுச்சியுரை ஆற்றினார். அந்த நாளை எண்ணிப்பார்க்கிறேன்.
போராட்ட குணமும் தியாக உணர்வும், அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சு வரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார். இதனை இக்கால மகளிர் அணியினரும் உணரவேண்டும் என்றுதான் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாங்கள் பெரியாரின் பேரன்: பிரச்சாரத்தில் கமல்
”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?