அன்றைய திரையுலகில் கலைஞரின் வசனத்தை பேசி ஓரிரு நிமிடங்களாவது நடித்துவிட மாட்டோமா, அதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்துவிட மாட்டோமா என்ற வேட்கை கதாநாயகர்கள், கதாநாயகிகள் முதல் சிறு வேடங்களில் நடிப்பவர்கள் வரை அனைவருக்கும் இருந்தது.
ஆனால் ஒரு படம் முழுவதும் கலைஞரின் வசனத்தை பேசி நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்தும் அதை கலைஞரிடமே சென்று சொல்லி தடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 3-ஆம் தேதியன்று பல்வேறு தலைப்புகளில் முரசொலி சிறப்பிதழ் வெளியிட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர் என்ற தலைப்பில் சிறப்பிதழ் வெளிவந்துள்ளது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலைஞருக்கும் தனக்குமான நட்பு, கலைஞரை சந்தித்த முதல் அனுபவம், கலைஞர் எழுதிய வசனத்தை பேச தயங்கியது உள்ளிட்ட அனுபவங்களை கட்டுரையாக எழுதியுள்ளார்.
ரஜினிகாந்த் எழுதியுள்ள கட்டுரையில், “கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எஸ்.பி. முத்துராமன் கலைஞரைப் பற்றி நிறைய விஷயங்களை எனக்கு சொல்லியிருக்கிறார். எஸ்.பி.முத்துராமன் தந்தை ராம சுப்பையா திராவிட கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்தவர். அண்ணா, கலைஞர் மற்றும் பல தலைவர்கள் செட்டிநாடு சென்றால் ராம சுப்பையா வீட்டில் தான் தங்குவார்கள். அங்குதான் பல ஆலோசனைகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். எஸ்.பி.முத்து ராமன் கலைஞரைப் பற்றி சொல்ல சொல்ல அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் அதிகமானது.
தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர். கலைஞர் எழுதிய “பராசக்தி படத்தின் அற்புதமான, சமுதாய சீர்திருத்தம், புரட்சி கரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரே நாளில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்ஜிஆருக்கு “மருதநாட்டு இளவரசி”,“மந்திரிகுமாரி”, “மலைக்கள்ளன்” போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக்கி எம்ஜிஆரை நட்சத்திரமாக மாற்றினார்.
1977 ஆம் ஆண்டு என்னுடைய TMU 5004 பியட் காரில் மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது. வண்டியில் வந்துகொண்டிருந்தவரை என் கார் கண்ணாடி மூலம் உற்றுப்பார்த்தேன். நன்கு தெரிந்த முகம். கண்ணில் கருப்புக்கண்ணாடி கலைஞர் என்று தெரிந்தது. நான் அப்படியே இடது பக்கமாக ஒதுங்கி வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். காரில் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் நான் கலைஞர் அவர்களை முதல் முதலில் பார்த்தது.
நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் நண்பர் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் என்னிடம் வந்து “நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன். நம் படத்துக்கு கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத்தூக்கி வாரிப் போட்டது.
எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா ? நடக்காத காரியம்… இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று.
அவர் வசனம் எழுத சம்மதித்ததே நமக்கு கிடைத்த பாக்கியம். அவர் வசனம் எழுதினால் நம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நான் எப்படி சொல்வது என்று திண்டாடினார். நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள். நானே அவரிடம் சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி கலைஞர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
கலைஞரை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றேன். தமிழ் நாட்டுக்கே தெரிந்த லக்ஷனமான வீடு. அவருடைய உதவியாளர் சண்முகநாதன் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய படிக்கட்டுகள் மூலம் என்னை கலைஞர் இருக்கும்அறைக்குள் அழைத்துச் சென்றார். 1977 மியூசிக் அகாடமி அருகில் பார்த்த அதே முகம்.., அதே புன்னகை… வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு “கதையைக் கேட்டேன்… நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம் என்றார். நான் அவரை சார் என்று தான் அழைப்பேன். “சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது,
எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்” என்று கூறினேன்.
அதற்கு அவர் சிரித்து “எனக்கு யாருக்கு எப்படி எழுதவேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டேன்… அதே போல எம்.ஜி.ஆருக்கு எழுதுவதைப்போல சிவாஜிக்கு எழுதமாட்டேன். உங்கள் படங்களை நான் பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுறேன்”என்று சர்வ சாதாரணமாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனை அந்த நொடியில் எனக்கு தோன்றியதற்கு நீ கெட்டிக்காரன்டா என்று நானே மகிழ்ந்து “சார் படப்பிடிப்பில் நாங்கள் சில வசனங்களை மாத்துவோம் சில வசனங்களை நீக்குவோம். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை மாத்தவும் முடியாது நீக்கவும் முடியாது. அது சரியானதாகவும் இருக்காது”என்று கூறினேன்.
அதற்கு அவர் “மாற்றுங்கள்.. ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?” என்று கூறினார். அவர் அப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் நொடியில் சாம்பல் ஆகிவிட்டது. எனக்கு ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தேன். இதை கவனித்த கலைஞர் சிரித்துக்கொண்டே “முன்னால் யார் வசனங்களை எழுதினாரோ அவரே எழுதட்டும்… நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்… நீங்கள் கவலைப்பட வேண்டாம்…” என்று கூறி தன் உதவியாளரிடம் தயாரிப்பாளரை அழைக்கும் படி கூறினார்.
தயாரிப்பாளரிடம் “என்னுடைய வசனங்களை பேசுவதற்கு தனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ரஜினி கூறுகிறார். நான் அவருடைய பாணியிலேயே எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இந்த மாதம் 10ஆம் தேதி படப்பிடிப்பு என்று ரஜினி கூறுகிறாரே… நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்… காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. எனக்கு ஏற்கனவே முன் நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆகையால் இந்தப் படத்திற்கு என்னால் வசனங்கள் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பி வைத்தார். பிறகு என்னைப் பார்த்து “என்ன ரஜினி இப்போ உங்களுக்கு திருப்தியா?” என்று கேட்டார்.
தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல், என்னையும் திருப்திப்படுத்திய அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…