மெரினா கடற்கரையில் கடலுக்குள் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முழு மனதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகி திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவகம் அருகே கடலுக்குள் 134 அடி உயரமுள்ள பேனா சிலை கலைஞரின் நினைவாக நிறுவப்படும் என்று 2021 ஆகஸ்டு மாதம் தமிழக அரசு அறிவித்தது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி கூட இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணியைப் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென இரவு 8.30 மணிக்கு மெரினாவுக்கு சென்றார். அப்போது அவருடன் முரசொலி செல்வம், சன் டிவி கலாநிதி மாறன் ஆகியோரும் சென்றிருந்தனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர்களும் அங்கே இருந்தனர்.
இந்த நிலையில் தான் அன்றிரவு மெரினாவுக்கு வருவதற்கு முன்பே முதல்வருக்கு இந்த பேனா சிலை அமைப்பது பற்றி இரண்டு யோசனைகள் இருந்திருக்கிறது என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.
“ஜூலை 9 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுடைய தாயார் தயாளு அம்மையாரின் 90 ஆவது பிறந்தநாள் விழா. அன்று தான் முரசொலி செல்வத்தின் திருமண நாளும் கூட. இந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் அன்று கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் சந்தித்துப் பேசி விருந்து சாப்பிட்டனர். அப்போது முரசொலி செல்வம், கலாநிதி மாறன் ஆகியோருடன் ஸ்டாலின் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் பேனா சின்னம் பற்றிய பேச்சு வந்திருக்கிறது.
அப்போது தான் ஸ்டாலின், ‘அப்பாவுக்காக கடல்ல பேனா வைக்குறதை சில பேர் அரசியலுக்காக எதிர்க்குறாங்க. சில பேர் சுற்றுச்சூழலுக்காக எதிர்க்குறாங்க. யாருடைய எதிர்ப்பும் இல்லாம பேனா சிலை அமையணும்னு நான் நெனக்கிறேன். இதுல அரசியல் பண்ணிக்கிட்டிருக்க வேணாம். இல்லேன்னா கடல்ல வைக்காம நினைவிட வளாகத்துலயே கூட வைக்கலாமானு யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு முரசொலி செல்வம், கலாநிதி மாறன் ஆகியோர், ‘நம்மை யாரு எப்ப எதிர்க்காம இருந்தாங்க. அதையெல்லாம் பார்த்தா முடியுமா?’ என்று பதிலளித்துள்ளனர். கலாநிதி மாறன் முதலமைச்சரைப் பார்த்து, ‘மாமா… நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க? 80 கோடி ரூபாய்க்கு மேல ஆகும். அதை அரசுப் பணத்துலேர்ந்து செலவு பண்ணனுமானு சில பேர் கேட்டதைப் பத்தி யோசிக்கிறீங்களா? அரசுப் பணத்தை செலவு செய்ய வேண்டாமென்றால்… அரசே ஒரு வேண்டுகோள் விடுத்தால் போதும். தாத்தாவோட நினைவுச் சின்னத்துக்கு ஆகும் செலவை ஏற்க பல நிறுவனங்களும் முன் வருவாங்க. நானும் கூட அதற்குத் தயார்’ என்று சொல்லியுள்ளார்.
இதன் பிறகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அமைச்சர் வேலுவும், ‘கலைஞர் பேனா சின்னத்தை நாம் ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் திட்டமிட்ட முறையில் நிறைவேற்ற வேண்டும்’ என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை வைப்பதற்கும் இப்படித்தான் எதிர்ப்பு எழுந்தது. அதன் செலவு இன்னும் பிரம்மாண்டமானது. அப்போது அரசு ஒரு சிறு தொகைதான் அந்த சிலை அமைப்பதற்கு ஒதுக்கியது.
அரசின் வேண்டுகோளை ஏற்று ஓ.என்.ஜி.சி, ஐஓசி, பாரத் பெட்ரோலியம், குஜராத் அரசின் கனிமவளக் கழகம் போன்ற பல நிறுவனங்கள் அந்த செலவை ஏற்றுக் கொண்டன. அதேபோல நாமும் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு நிதி திரட்டலாம். அரசே செலவை ஏற்கவேண்டியது இல்லை” என்று யோசனை கூறியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு.
முன்னதாக… கலைஞர் நினைவு பேனா சிலை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடந்தபோது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக எதிர்த்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இத்திட்டத்தை எதிர்த்து வருகிறார். இந்த அரசியல் ரீதியான எதிர்ப்புகளைத் தாண்டி பூவுலகின் நண்பர்கள் போன்ற சுற்றுச் சூழல் நல அமைப்புகளும் இத்திட்டத்தை எதிர்க்கின்றன. உச்ச நீதிமன்றத்திலும் இதுகுறித்த பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி அளித்தது. மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை க்ளியரன்ஸ் பெறப்பட்ட நிலையிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் இருந்து எழும் எதிர்ப்புகள் நெருடலை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள் திமுக வட்டாரங்களில்.
அதனால்தான்… “கலைஞர் நினைவிடத்திற்குள் ஒரு சிறிய பேனா சின்னத்தை அமைப்போம். இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டாம்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனால் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பல அமைச்சர்கள் கட்சியின் முன்னோடி நிர்வாகிகள் பலரும், ‘கலைஞருக்காக கடலுக்குள் பேனா அமைப்போம். அதில் எந்த மாற்றமும் வேண்டாம்’ என்று பட்டேல் சிலையை முன் மாதிரியாக வைத்து முதல்வரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்விஷயத்தில் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
-வேந்தன்
“கல்வியின் மூலம் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கலாம்” – சூர்யா