தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (பிப்ரவரி 22) நிறைவடைகிறது. வேளாண் பட்ஜெட் குறித்த விவாதம் இன்றைய நாள் அமர்வில் நடைபெற்று வருகிறது.
காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. கேள்வி நேர பதிலுக்கு பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், “நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞரின் நினைவகம் முழுமையடைந்திருக்கிறது.
அதுமட்டுமல்ல… தலைவரை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நினைவகங்கள் வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. இதனை பெரிய விழாவாகக் கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த விரும்பியிருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்கள் (சபாநாயகர்) மூலமாக அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று விதி எண் 110-ன் கீழ் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் நினைவிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக கட்டட பணிகள் நிறைவுற்று திறக்கப்பட உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சட்டென சரிந்த தங்கம் விலை… நகை வாங்கிட நல்ல தருணம் இதுதான்!
திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி அறிவிப்பு!