கலைஞர் நினைவு தினம்: சென்னை டிராஃபிக் மாற்றங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

அரசியல்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. கலைஞரின் நினைவிடத்தில் தொடங்கும் மாரத்தான் போட்டியானது, பட்டினப்பாக்கம், பெசண்ட் நகர் வழியாக மீண்டும் கலைஞர் நினைவிடத்தில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் தலைமையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் பேரணியாக சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்துகின்றனர். இதனையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காலை 4 மணி முதல் 10 மணி வரை, பெசண்ட் நகர் ஆல்காட் பள்ளியிலிருந்து திருவல்லிக்கேணி, காமராஜர் சாலை, மெரினா மாநகராட்சி நீச்சல் குளம் வரை அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்.பி.படேல் சாலையில் இருந்து பெசண்ட் அவென்யூ சாலையில் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அந்த வழியாக வரும் வாகனங்கள் எல்.பி.சாலை நோக்கி திருப்பி விடப்படும். எல்.பி சாலையில் இருந்து மாநகராட்சி நீச்சல் குளம் , மெரினாவுக்கு வரும் திசையில் போக்குவரத்து மாற்றம் இல்லை. எம்.ஜி சாலை மற்றும் டைகர் வரதாச்சாரி சாலையில் இருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்கள் 6 வது அவென்யூ மற்றும் 16 வது குறுக்குத் தெரு வரை அனுமதிக்கப்படும்.

2வது அவென்யூ சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெசண்ட் அவென்யூ சாலையில் சென்று , ஆவின் பெசண்ட் நகர் 1-வது அவென்யூ மற்றும் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படும். கால்வாய் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஆர்.கே.மட் சாலை நோக்கி அனுமதிக்கப்படாது மற்றும் வாகனங்கள் காளியப்பா சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.

ஆர்.கே.மட் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சீனிவாசா அவென்யூவில் ஆர்.ஏ.புரம் நோக்கி திருப்பி விடப்படும். மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே மட் ரோடு வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் அந்த வழியாக அனுமதிக்கப்படாது. தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சந்திப்பு வழியாக செல்பவர்கள், வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புரம் இரண்டாவது பிரதான சாலை, சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் எஸ்.வி படேல் சாலை வழியாக பயணிக்கலாம்.

காமராஜர் சாலையிலிருந்து மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, செல்ல விரும்பும் வாகனங்கள் லைட் ஹவுஸ் சந்திப்பில் லூப் சாலை, கால்வாய் சாலை, வழியாக வி.கே.அய்யர் சாலை, காளியப்பா சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும். கச்சேரி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது.லூப் சாலை வழியாக காமராஜர் சாலையில் இடதுபுறம் திருப்பப்படும்  என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்திலிருந்து மெரினா கடற்கரைக்கு காலை 8.30 மணியளவில் திமுகவினர் ஊர்வலம் செல்ல உள்ளனர். இதன்காரணமாக, திருவல்லிக்கேணி ஓமந்தூரார் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில் அனுமதிக்கப்பட்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் போர்நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும். காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும்.

ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணா சிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று சென்னை பெருநகர போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

செல்வம்

அன்புசெழியன் வீட்டில் 26 கோடி ரூபாய் பறிமுதல்! சிக்கலில் மேலும் சில தயாரிப்பாளர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *