கலைஞர் நினைவு நாணயம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி!

Published On:

| By Kavi

கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படவுள்ள நிலையில் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் நாணயம் வெளியிடுவது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 16) முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள மடலில்,

“நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இருந்திராத ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்றால் அது நம் தலைவர் கலைஞரின் மறைவின்போதுதான்.

95 ஆண்டுகால வாழ்க்கையில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கலைஞரின் அரசியல் -நிர்வாகம் – கலை – இலக்கியம் – திரைத்துறை – இதழியல் என பன்முகச் சாதனைகள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

அவருடைய திறமை எல்லை கடந்த வரவேற்பைப் பெற்றவை. அதற்குக் காரணம், தலைவர் கலைஞரின் அத்தனை பங்களிப்புகளிலும் முதன்மை நோக்கமாக இருந்தது தமிழ் – தமிழர் – தமிழ்நாடு இவற்றின் முன்னேற்றம்தான்.

அதனை அவர் சுயமரியாதை – சமூகநீதி என்ற மனித உரிமைக் கொள்கையின் வழியே நிறைவேற்றிக் காட்டினார்.

அண்ணா ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில், அண்ணாவின் நினைவாக ஒன்றிய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

உணர்வுப்பூர்வமான அந்த விழாவில் அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங்குடனும், ஒன்றிய அமைச்சர் ஷெர் சிங்குடனும் முதலமைச்சரான கலைஞர் கலந்துகொண்டார். அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டபோது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். அஞ்சல் தலைக்கேற்ற பொருத்தமான முறையில் அண்ணாவின் படத்தைத் தேர்வு செய்து தந்திருந்தவர் தலைவர் கலைஞர்.

அத்துடன், அந்தப் படத்தின் கீழே ‘அண்ணாதுரை’ என்று அண்ணாவின் கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் அண்ணாவின் தம்பியான கலைஞர்.

இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவின்போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறை பொறுப்பு வகித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், அப்போயை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பின்னாளில் கலைஞரின் ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவருமான பிரணாப் முகர்ஜி அண்ணாவின் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அந்த விழாவில், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த நான், அண்ணா நூற்றாண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் நூலினை வெளியிட்டு உரையாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.

அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை போலவே, அவரது நினைவாக வெளியிடப்பட் நாணயத்திலும் ‘அண்ணாதுரை’ என்ற அண்ணாவின் கையெழுத்தை இடம்பெறச் செய்தவர், அண்ணாவின் இலட்சியங்களுக்கு ஆட்சி நிர்வாகத்தின் மூலமாகச் செயல்வடிவம் கொடுத்தவரும் கலைஞர்தான். இந்திய அரசின் நாணயத்தில் தமிழ் எழுத்துகள் முதன்முதலில் இடம்பெற்றதும் அப்போதுதான்.

எழுச்சியும் உணர்ச்சியும் மிகுந்த அந்த விழாவில் நாணயத்தை வெளியிட்ட திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள், நமது பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மாபெரும் ஜனநாயகவாதி, மிகச் சிறந்த பேச்சாளர், தனிப்பெருமை படைத்த நாடாளுமன்றவாதி, மாபெரும் இலக்கியவாதி.

ஓர் அரசியல் தலைவர் என்பவர் சமகாலத்திற்கு மட்டுமின்றி, எக்காலத்திற்கும் அரசியலில் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டி இன்றளவும் ஒவ்வொருவரின் போற்றுதலுக்கும் உரியவராகத் திகழ்கிறார். அண்ணா காலத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரது உரைகளைக் கேட்பது ஆனந்தமாக இருந்தது.

அவர் அவையில் உரை நிகழ்த்தினால் நாடாளுமன்றத்தின் இதர பகுதிகளில் எவரும் இருக்கமாட்டார்கள். மாற்றுக்கட்சி உறுப்பினர்களும், மக்களவையிலிருந்து அமைச்சர்களும் அண்ணாவின் பேச்சைக் கேட்க மாநிலங்களவைக்கு வருவார்கள். அவருடைய பேச்சு அன்றும் இன்றும் இரசித்துப் போற்றப்படுகிறது” என்று புகழாரம் சூட்டினார்.

தலைமையுரையாற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் தன் அண்ணனின் பெருமைகளை இந்திய ஒன்றிய அமைச்சரும், இளைய தலைமுறையினரும் உணர்ந்து கொள்ளும் வகையில் உரை நிகழ்த்தினார். “அண்ணாவின் நாணயம் அரசியலில் எப்படிப்பட்டது என்பதை இங்கே வெளியிட்டிருக்கிறார்கள். அண்ணாவின் நாணயம் எத்தகையது என்பதற்கு அரசியல் வரலாற்றிலே எத்தனையோ கட்டங்கள் உண்டு, எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிற நேரத்தில் நான் விரும்புவது, மாநில அதிகாரங்களுக்கு வலு சேர்த்து, மாநில மொழிகள் மத்தியிலே உயர வேண்டும். சமநிலையை அடைய வேண்டும்” என்று அந்த விழாவிலும் அண்ணாவின் தம்பியாக மாநில உரிமைக்குரலையும், தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழித் தகுதியையும் கோரினார் நம் உயிர்நிகர் கலைஞர்.

எந்த இடமாக இருந்தாலும் அங்கே தமிழுக்காக வாதாடியவர் கலைஞர். தன் 14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி, மொழிப் போர்க்களம் புகுந்த அவர்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார்.

தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் அவரது உருவத்துடன் அவர் கையெழுத்திலான, ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன.

இமயத்தின் உச்சியில் கொடிநாட்டி, தமிழின் பெருமையை உயரச் செய்த சேரன் செங்குட்டுவனை வரலாறு பேசுவது போல, இந்திய அரசு தனது நினைவாக வெளியிடும் நாணயத்தில் பொறித்து நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் தலைவர் கலைஞர்.

கலைஞரின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், கலைஞரின் மகனாகவும் என் நன்றியை  உரித்தாக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநரின் தேநீர் விருந்து… அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சுவாரஸ்ய புகைப்படங்கள்!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

சுதந்திரத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி… என்ன காரணம்?

திருப்பதி: நவம்பர் மாத புக்கிங்… முழு விவரம்!  

Kalaignar 100 Rupees Coin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel