கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமில் கலந்து கொண்ட பெண்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகள் தான் இன்றைக்கு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் இன்று (ஜூலை 24) துவங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தை ஸ்டாலின் தேர்வு செய்ய முக்கிய காரணம், 1989-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் சுய உதவிக்குழு திட்டத்தை இங்கு தான் துவங்கி வைத்தார்.
விண்ணப்ப பதிவு முகாமை துவங்கி வைக்கும் விதமாக அங்கிருந்த பெண்மணி ஒருவரை கலெக்டர் சாந்தி அழைத்து வந்தார். அவரது ஆதார் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் மொபைல் போனில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தனர். அதிகாரிகள் பக்கத்தில் உட்கார்ந்த ஸ்டாலின் அந்த பெண்ணிடம், “அரசு பேருந்து இலவச பயண திட்டம் பயனுள்ளதாக உள்ளதா? ஆட்சியில் ஏதேனும் குறை உள்ளதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண், “ஆட்சி நல்ல இருக்குங்கய்யா. ஒரு குறையும் இல்ல. எப்பவாவது தான் அரசு மகளிர் பேருந்தை பயன்படுத்துவேன்” என்றார்.
முதல்வரின் முதன்மை செயலாளர் முருகானந்தம் விண்ணப்ப பதிவு குறித்து முதல்வரிடம் விளக்கி கொண்டிருந்தார். விண்ணப்பம் பிராசஸ் ஆனவுடன் “உங்க மொபைலுக்கு மெசேஜ் வந்திருச்சி…அக்கவுண்ட்ல உங்களுக்கு பணம் வந்துரும்.. அதெல்லாம் உங்களுக்கு தெரியும்ல” என்று முதல்வர் கேட்டதும், அந்த பெண் அப்பாவியாக “தெரியாதுங்கய்யா” என்று சன்னக்குரலில் கூறினார்.
முதல்வர் சிரித்துக்கொண்டே அதிகாரிகளிடமிருந்து மொபைலை வாங்கி அந்த பெண்ணிடம் “இங்க பாருங்க…கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உங்க பெயர் பதிவு செஞ்சாச்சு” என்று மொபைல் போனை காட்டினார். அதற்கு அந்த பெண், “ஐயா… நன்றிங்கய்யா” என்று கூறிவிட்டு சென்றார்.
அடுத்து வந்த பெண்ணிடம், “எந்த ஊரும்மா, என்ன பண்றீங்க… எத்தனை பசங்க… கணவர் என்ன செய்கிறார்… என்ற கேள்விகளோடு… பேங்க் அக்கண்ட்ல எவ்வளவு இருக்கு?” என்று சிரித்துக்கொண்டே ஸ்டாலின் கேட்க, அதற்கு அந்த பெண்ணும் சிரித்துக்கொண்டே “அவ்வளவுலாம் இல்லங்கையா” என்றார். தொடர்ந்து “இந்த திட்டம் பத்திலாம் முன்னமே தெரியுமா?” என்று ஸ்டாலின் கேட்க, “வீட்டுக்காரு நம்ம கட்சிதாங்கய்யா… அதனால இந்த திட்டத்தை பத்திலாம் சொல்லிருக்காங்க” என்றார்.
இரண்டு பெண்களுக்கான விண்ணப்ப பதிவு பிராசஸ் முடிந்தவுடன் திட்டம் குறித்து வந்திருந்த பெண்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது முதல்வர் ஸ்டாலின், “எல்லாம் இந்த ஊர்தானா? இந்த திட்டம் குறித்து என்ன நினைக்கிறீங்க?” என்று கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகளிடமிருந்து மைக் வாங்கிய பெண் ஒருவர், “எங்க ஊர்ல உங்கள பார்க்குறதே ரொம்ப சந்தோஷமா இருக்குது. என் பெயரு லெட்சுமி, வீட்டுக்காரரு பெயர் கண்ணன். நான் வீட்ல பூ கட்டிட்ருக்கேன். என் கணவர் எலக்ட்ரானிக் கடையில வேலை பார்க்குறாரு. எனக்கு இரண்டு பசங்க… எனக்கு பெருசா வருமானம் எதுவும் கிடைக்காது. மகளிர் உரிமை தொகை பிள்ளைங்க மேல் படிப்பு செலவுக்கும், வீட்டு செலவுக்கும் உபயோகமா இருக்கும். கலைஞர் அய்யா முதன்முறையா தர்மபுரி மாவட்டத்துல தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் ஆரம்பிச்சாங்க… அதில் நான் பலன் அடஞ்சிருக்கேங்கயா. லோன் வாங்கி ஆடு வாங்கி விட்ருக்கேன்யா அது எனக்கு பெரிதும் உதவியா இருக்கு” என்றார்.
உடனே ஸ்டாலின் “வெரி குட்… வெரி குட்” என்று அந்த பெண்ணை பாராட்டினார்.
மற்றொரு பெண்மணி எழுந்து, “என் பேரு ஸ்ரீ பிரியா, என் கணவர் பெயர் வர்ணதேவன், அவரு இறந்து பத்து வருஷம் ஆகுது. எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். நான் காட்டு வேலைக்கு தான் போறேன். மாசத்துல பத்துல இருந்து பதினைஞ்சு நாள் தான் வேலை இருக்கும். மத்த நாள் வீட்ல தான் இருப்பேன்” என்று பேசிக்கொண்டிருந்தவரை இடைமறித்த ஸ்டாலின், “பத்து நாள் வேலைக்கு போறீங்களே அதுல என்ன உங்களுக்கு கூலி கிடைக்கும்” என்று கேட்க, “அரை நேரம் போனா 150 ரூவா. முழு நேரம் போனா 300 ரூவா. வேறு எந்த நிரந்தரமான வருமானமும் எனக்கு இல்லை. ஐயா அறிவிச்ச இந்த திட்டத்தால எனக்கு பெரிய உதவியா இருக்கும். என் பொண்ணு இந்த வருஷம் தான் பிளஸ் 2 முடிச்சிருக்கா. புதுமை பெண் திட்டம் மூலமா என் பெண்ணுக்கு பணம் கிடைச்சிருக்கு. என் பொண்ண நல்லா படிக்க வைக்க இந்த தொகை உதவும்” என்றார்.
அப்போது ஸ்டாலின் அய்யா கிட்ட நான் பேசனும் மைக் கொடுங்க என்று கையை உயர்த்தி மைக் வாங்கிய பெண் ஒருவர் பேச ஆரம்பித்தார்.
“என் பெயர் ராதிகா. என் பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்குறா. கொரோனாவுக்கு அப்புறம் வாழ்வாதாரமே ரொம்ப மோசமா போயிருச்சுங்கய்யா. இந்த சமயத்துல மகளிர் உரிமை திட்டம் ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். அதுமட்டும் இல்லாம தர்மபுரி மாவட்டத்துல எங்க ஊருக்கு வந்து எங்ககிட்ட நீங்க இவ்வளவு தூரம் பேசுறது ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு கடவுளையே நேர்ல பார்த்து வரம் வாங்குன மாதிரி இருக்கு” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
முதல்வர் அவரிடம் புன்னகையுடன், “நீங்களா பேசுறீங்களா…இல்லை யாராவது இப்படிலாம் பேசுங்கன்னு சொல்லிக்கொடுத்து பேசுறீங்களா” என்றார். இதனால் முதல்வர் அருகில் இருந்த அமைச்சர்கள் நேரு எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆகியோர் சிரித்தனர்.
உங்களை “பார்க்கணும்க்கிற ஆர்வத்துலயே உள்ளுக்குள்ள இருந்து வருதுங்கயா” என்று அந்த பெண்மணி மீண்டும் உணர்ச்சி பெருக்குடன் பேசினார். தொடர்ந்து அவர்களிடம், 100 நாள் வேலை திட்டம், ஆட்சி குறித்து விசாரித்து விட்டு “உங்க எல்லோரையும் சந்தித்ததுல ரொம்ப மகிழ்ச்சிம்மா” என்று கூறி முதல்வர் அங்கிருந்து கிளம்பினார்.
விண்ணப்ப பதிவு முகாமில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வரின் முதன்மை செயலாளர் முருகானந்தம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்டோர் இருந்தனர்.
செல்வம்
மணிப்பூர் சம்பவம்: ஆம் ஆத்மி எம்.பி. சஸ்பெண்ட்!
மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!