கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இந்த மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதும் ஒன்றாகும்.
இந்த அறிவிப்பை செயல்படுத்த, கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்றும் பெயரிட்டார்.
இதையடுத்து, உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்த வழிமுறைகளை பின்பற்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில், தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 19,487 முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளும் இணைக்கப்பட்டனர்.
இந்தத் திட்டத்தை பொறுத்தவரை, கடந்த 2023 – 24-ம் நிதியாண்டில் ரூ.8,123.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த 2024 – 25-ம் ஆண்டுக்கு ரூ.13,722.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலான காலத்தில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 14,723 மகளிர் உட்பட மொத்தம் 1,15,27,172 மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டது.
அவ்வாறு மேல் முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களுக்கும் தற்போது ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
மாதம்தோறும் 15-ம் தேதி வழக்கமாக உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் முதல் 1.48 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கதம்ப சாம்பார்!
அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு : யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?
ஷாக் அடிக்குது மக்களே : அப்டேட் குமாரு
9 நாட்களுக்கு அந்யோதயா விரைவு ரயில் ரத்து : பயணிகள் அதிருப்தி!