பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) காலையில் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டுள்ளார்.
மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடி செலவில் 7 தளங்கள் அடங்கிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தில் சிறுவர்கள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான இன்று கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
திறப்பு விழாவிற்காக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் முற்பகல் 11.25 மணியளவில் மதுரையை சென்றடைய உள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சர்க்கியூட் ஹவுசுக்கு சென்று ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாலை 5 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் மதுரை ஏ.ஆர்.மைதானத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பின்னர் இரவு 8.55 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்து சென்னை திரும்ப உள்ளார்.
மோனிஷா