சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழும் சென்னை புத்தகக் காட்சி இன்று (ஜனவரி 6) தொடங்குகிறது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று மாலை 46 ஆவது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளையும் பபாசி விருதுகளையும் படைப்பாளிகளுக்கு வழங்குகிறார்.
இதற்கிடையே தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரும் தமிழ் ஆர்வலருமான தங்கம் தென்னரசு தனது சமூக தளத்தில் வெளியிட்ட தகவல் எழுத்தாளர்கள், வாசகர்கள் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
“முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் நிறுவப்பட்ட விருதிற்கு அவர் பெயரையே போடாமல் பபாசி வெறுமனே பொற்கிழி விருது என அவர்களது அமைப்பின் பேரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது என்றால்…” என்று தனது வேதனையை கோபத்தை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த போது திமுக அறக்கட்டளையில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி, வருடா வருடம் சிறந்த எழுத்தாளர்களுக்கு இந்த நிதியில் இருந்து விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்தகக் காட்சியை இன்று தொடங்கி வைக்கும் நிலையில் அவரது அமைச்சரவையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, ’கலைஞர் கொடுத்த விருதில் கலைஞர் பெயரே இல்லையென்றால்… ’ பதிவிட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியது.
தங்கம் தென்னரசுவின் இந்த பதிவில் பல்வேறு எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
மாநிலங்களவை எம்பி ஆன புதுக்கோட்டை எம். எம். அப்துல்லா, “நம்ம நல்லவங்கன்னு அர்த்தம். ஆத்தா மாதிரி இல்லைன்னு அர்த்தம்” என்று கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஜெயலலிதா மாதிரி இல்லாமல் ஸ்டாலின் மென்மையாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ளார் அப்துல்லா.
கலைஞர் தனது சொந்த நிதியில் நிறுவிய இந்த பொற்கிழி விருது பற்றி அறிவிப்பில் அவரது பெயர் இல்லாமல் எப்படி தனது அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் அறிவிக்க முடியும் என்று பல்வேறு தரப்பினரும் தங்கம் தென்னரசுவின் பதிவுக்கு எதிர்வினை ஆற்றினார்கள்.
நம்மிடம் பேசிய வட சென்னை தமிழ் சங்கத் தலைவர் எ.த. இளங்கோ,”நவீன தமிழ்நாட்டின் தந்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பெயரால் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மு கருணாநிதி விருது குறித்து ஜனவரி 4 ஆம் தேதி,
பபாசியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடிதத்தில் கலைஞர் மு கருணாநிதி விருது எனக்கு குறிப்பிடாமல் வெறும் பொற்கிழி விருது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாகரிகம் மற்ற செயலை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் மட்டுமல்லாது அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புத்தகக் காட்சி நடத்த நிதி ஒதுக்கீடு செய்தும் மண்டலம் தோறும் இலக்கிய திருவிழாக்களை நடத்தியும் வருகிறார்.
இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியில் சர்வதேச புத்தகக் காட்சியும் நடைபெற உள்ள நிலையில் கலைஞரின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில் இப்படி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்குரியது’ என்று கூறுகிறார்.
இந்நிலையில் பதிப்பாளர்கள் சிலர் இதுகுறித்து பபாசி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது அது பபாசி நிர்வாகிகளுக்குள் பரிமாறப்பட்ட சுற்றறிக்கை அதை பெரிது படுத்த வேண்டாம். அழைப்பிதழில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி விருது 2023 என்று அச்சிட்டு இருக்கிறோம் என விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் பபாசியின் விளக்கம் புகார் சொன்னவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
நம்மிடம் பேசிய புது எழுத்து இதழின் ஆசிரியர் மனோன்மணி, ‘பபாசியின் விளக்கம் ஒருபக்கம் இருந்தாலும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து நூலகத் துறையை தனியாக பிரிக்க வேண்டும். நிறைய நாடுகளில் நூலகத்துறைக்கு என தனி அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நூலகத்துறைக்கு தனி அமைச்சகத்தை முதல்வர் அமைக்க வேண்டும். ஏனெனில் நூலகம், பதிப்பகம், புத்தகக் காட்சி பற்றி எதுவும் அறியாத- நூலக அறிவியல் பயிலாத கல்வித் துறை அதிகாரிகள் நூலகத் துறைக்கு பொறுப்பு வகிக்கிறார்கள்.
கல்வித் துறையும் நூலகத்துறையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக இருப்பது 80 ஆம் ஆண்டில் இருந்து தொடர்கிறது.
இதனால் நூலகத் துறை என்னும் குழந்தை நோய்வாய்ப் படுகிறது. எனவே நூலகத்துறையை தனி அமைச்சகமாக முதல்வர் அமைக்க வேண்டும்” என்கிறார்.
புத்தகக் காட்சி தொடங்கும் முன்பே பொற்கிழி விருது பெயர் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.
வேந்தன்
இடைவேளை இல்லாமல் நடந்த அதிமுக வழக்கு: ஜன 10.க்கு ஒத்தி வைப்பு!
சென்னையில் ஜல்லிக்கட்டு : கமல் திட்டம்!