தமிழக, இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் சாதனைகளைப் படைத்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கட்சி அளவிலும், ஆட்சி அளவிலும் மிகச் சிறப்பாக கொண்டாட திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க விழா பொதுக்கூட்டம் வரும் ஜூன் 3 ஆம் தேதி சென்னை புளியந்தோப்பில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கான அழைப்பிதழைப் பார்த்த திமுக சீனியர் நிர்வாகிகள் சற்றே புருவம் குவித்து வருகின்றனர்.
அப்படி என்ன இருக்கிறது அழைப்பிதழில்? இந்த அழைப்பிதழில், ‘வாழ்த்துரை’என்ற தலைப்பிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், ‘வாழ்த்துரை’ என்று இருக்க வேண்டுமா அல்லது புகழுரை என்று இருக்க வேண்டுமா என்பதுதான் சீனியர்கள் புருவம் குவித்து கேட்டுக் கொண்டிருக்கும் வினா.
”கலைஞர் வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர். அவரது நூற்றாண்டு விழாவில் அவருக்கான புகழுரைதான் ஆற்றப்பட வேண்டுமே தவிர, வாழ்த்துரை என்பது சரியான வார்த்தைப் பயன்பாடுதானா? மறைந்த தலைவரை நாமெல்லாம் சேர்ந்து வாழ்த்திடுவது மரபாக இருக்குமா?” என்ற கேள்விகளை சில திமுக சீனியர்களே நம்மிடம் கேட்டனர்.
கலைஞர் நூற்றாண்டில் ஆற்ற வேண்டியது வாழ்த்துரையா, புகழுரையா… இதையே இன்னொரு பட்டிமன்றமாகவும் வைத்துவிட வேண்டியதுதான்.
–வேந்தன்
“போக்குவரத்து துறையில் தனியார்மயம் கூடாது” – சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு!
மேகதாது அணை விவகாரம்: சிவக்குமாருக்கு துரைமுருகன் பதில்!