தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 24) கலைஞர் மு.கருணாநிதி வரலாறு, திராவிடமும் சமூக மாற்றமும் ஆகிய இரு நூல்களை வெளியிடுகிறார்.
தி இந்து நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டராக இருந்து ஓய்வு பெற்றவர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன். ஆசிய இதழியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும் இயங்கி வருகிறார்.
பன்னாட்டு மற்றும் தேசிய இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து, “கலைஞர் மு.கருணாநிதி வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார்.
அதுபோன்று, தமிழக அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவரும், பொருளாதார அறிஞருமான ஜெ.ஜெயரஞ்சன், “திராவிடமும் சமூக மாற்றமும்” என்ற நூலை எழுதியுள்ளார்.

இவ்விரு நூல்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 24) மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின் நூல்களை வெளியிட முதல் பிரதியை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.
விழாவில் கவிஞர் இளைய பாரதி வரவேற்புரை ஆற்றுகிறார். தி இந்து நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம், மாநில திட்டக்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மற்றும் ஜெயரஞ்சன் ஆகியோர் ஏற்புரை வழங்குகின்றனர். இவ்விழாவுக்கு வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரியா
“அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி” – வைரலாகும் போஸ்டர்!
பிஎப் 7 கொரோனா – தமிழகத்தின் நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!